Rajini On Meena - அய்யய்யோ மீனாவா.. அலறிய ரஜினிகாந்த்.. அதன் பின் நடந்தது என்ன தெரியுமா?
சென்னை: Rajini on Meena (மீனா குறித்து ரஜினி) மீனா 40 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் தனது பழைய நினைவலைகளை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார்.
நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதன் பிறகு ரஜினியுடன் எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக சிவாஜி, ரஜினிகாந்த் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நடித்த மீனா யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழில் ஒரு புதிய கதை படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார்

முன்னணியில் மீனா: கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்து 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக சோலையம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தக் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக செய்ததை அடுத்து கோலிவுட்டில் மீனா அலை அடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
ரஜினியுடன்: மீனாவின் ஃபேவரைட் ஜோடி என்றால் அது ரஜினிதான் என்ற கருத்து ரசிகர்களிடம் இருக்கிறது. மீனாவும் ரஜினியும் இணைந்து நடித்த எஜமான், வீரா, முத்து ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. குறிப்பாக முத்து படத்தில் ரஜினிக்கும், மீனாவுக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக செட் ஆகியிருந்தது. ரங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் இளமையுடனும், திறமையுடனும் வலம் வந்த மீனா 90களின் கனவுக்கன்னியாகவே மாறினார்.

அதிர்ந்த ரஜினி: ரஜினியும் மீனாவும் மூன்று படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். (அண்ணாத்த படத்தை தவிர்த்து). அதில் முதல் படம் எஜமான். ஏவிஎம் தயாரித்த அந்தப் படத்தை ஆர்.வி. உதயகுமார் இயக்கியிருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் மீனாதான் ஜோடி என தயாரிப்பு தரப்பும், இயக்குநரும் கூறியதும் ரஜினி அதிர்ந்துவிட்டாராம்.
எஜமான்: மீனா திரைத்துறையில் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி சமீபத்தில் விழா ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய ரஜினி, "எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்தார். காலங்கள் ஓடின. ஏவிஎம் தயாரிப்பில் எஜமான் படம் எடுக்க திட்டமிடப்பட்டது. கதை கேட்பதற்காக ஏவிஎம் சென்றிருந்தேன்.

அந்த மீனாவா இது: கதையை கேட்டுவிட்டு யார் ஹீரோயின் என்று கேட்டேன். நீங்களே சொல்லுங்கள் என்றார்கள். நான் இரண்டு, மூன்று பேரை சொன்னேன். இல்லை மீனாவை ஃபிக்ஸ் செய்திருக்கிறோம் என்றார்கள். எந்த மீனா என்று கேட்டேன். எந்த மீனாவா உங்களுடன் எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த்தில் நடித்தாரே அந்த மீனாதான் என சொன்னார்கள். நான் உடனே என்னங்க விளையாடுறீங்களா என கேட்டேன்.
நீங்கள் இப்படி சொல்வீர்கள் என தெரியும் என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு அங்கிருக்கும் ஒரு திரையரங்கில் மீனா நடித்த இரண்டு தெலுங்கு படங்களின் பாடல்களை போட்டு காட்டினார்கள். அதை பார்த்ததும் ஆடிப்போய்விட்டேன். பேபி மீனாவா இது என்று ஷாக் ஆனேன். எனக்கு மிக பிடித்த ஹீரோயின்கள் இரண்டே பேர்தான் ஒருவர் ஸ்ரீதேவி மற்றொருவர் மீனா" என்றார்.


Click it and Unblock the Notifications











