கமல், விஜய் சேதுபதி வரிசையில் ரஜினி... போதைக்கு எதிரான 1 கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா நடிக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், கமல், விஜய் சேதுபதி வரிசையில் போதையில்லா தமிழ்நாடு என்ற ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில், ரஜினியும் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போதையில்லா தமிழ்நாடு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக போதையில்லா தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் 1 கோடி கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கடந்த 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

கமல், விஜய் சேதுபதி வரிசையில் ரஜினி
வரும் 27ம் தேதியோடு இந்த கையெழுத்து இயக்கம் முடிவடையும் நிலையில், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் ஏற்கனவே கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது ரஜினியும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார். மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த இயக்கத்திற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ட்வீட்
இதனையடுத்து ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட புகைப்படங்களை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், "போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கையெழுத்திட்டு வாழ்த்தினார். மிகச்சிறந்த பணிக்கு எனது வாழ்த்துகள் என வழியனுப்பினார்" என பதிவிட்டுள்ளனர். இந்த டிவிட்டர் பதிவு ரஜினி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே மனம் திறந்த ரஜினி
சில தினங்களுக்கு முன்னர் நடந்த சாருகேசி திரைப்படத்தின் அறிவிப்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய ரஜினிகாந்த், நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்க காரணம் எனது மனைவி லதா தான். குடி, சிகரெட் என எல்லை மீறிய தன்னை அன்பால் மாற்றியவர் தனது மனைவி லதா தான் எனக் கூறியிருந்தார். திரைப்படங்கள் விதவிதமான ஸ்டைலில் சிகரெட்டை பற்ற வைத்து ரசிகர்களை கவர்ந்தவர் ரஜினி. சிவாஜி படத்தில் இருந்து புகை பிடிக்கும் காட்சிகளில் அவர் நடிப்பதில்லை. இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில், ரஜினியும் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











