சூப்பர் ஸ்டார் டைட்டில் வேண்டாம்னு அப்பவே சொன்னேன்.. அது என்னைக்குமே தொல்லைதான்.. ரஜினி பேச்சு!
சென்னை: சூப்பர் ஸ்டார் டைட்டில் வேண்டாம்னு அப்பவே சொன்னேன் என்று ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசி உள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான ஹூக்கும் பாடலில் ரஜினியின் சூப்பர் ஸ்டார் இமேஜை நிலைநிறுத்தும் வகையில் வரிகள் அமைந்திருந்தது.
அண்மைக்காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பாடல் வரி இருந்ததால், ரஜினி ரசிகர்கள் இந்த பாடலை இணையத்தில் வைரலாக்கினர்.

என்னைக்குமே தொல்லைதான்: சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நேற்று நடைபெற்ற ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஹுக்கும் பாடலை முதலில் கேட்ட போது தாறுமாறாக இருந்தது. ஆனால் அதில் இருக்கும் சூப்பர் ஸ்டார் வார்த்தையை நீக்குமாறு கூறினேன். சூப்பர் ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.
பயமா எனக்கா: ரொம்ப வருஷத்திற்கு முன்னாடியே சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க சொன்னேன். ஏன்னா அப்போ, கமல் ரொம்ப பெரிய நடிகராக இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாரு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனா, ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நான் பயப்படுவது ரெண்டா ரெண்டு பேருக்குக்குத்தான், ஒன்னு கடவுளுக்கு, ரெண்டு நல்ல மனிதர்களுக்கு. நல்ல மக்களோட சாபம் கண்டிப்பா நம்மை காயப்படுத்தும் என்றார்.

குட்டிக்கதை: இதையடுத்து,காக்கா, கழுகு கதை ஒன்றை கூறிய ரஜினி, குறைக்காத நாயும் இல்ல, குறை பேசாத வாயும் இல்ல என்ற பஞ்ச் வசனத்தை பேசினார். மேலும், குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம் இதனால், யாரும் குடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறினார்.
கோலாகலமாக நடந்த விழா: நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற இந்த இசைவெயீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனிருத், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ் சிவன் என பலர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனிருத், ஹூக்கும் பாடலை மேடையில் பாடி அனைவரையும் குஷிப்படுத்தினார். தமன்னா காவாலா பாடலுக்கு மேடையில் நாடமாடினார்.


Click it and Unblock the Notifications











