Rajinikanth: தலைவரே! இது வேற லெவல் கெத்து... இப்படியொரு சம்பவம் நடந்ததே தெரியலையே?
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து விரைவில் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மொய்தீன் பாய் லுக்கில் வலம் வந்த ரஜினியின் வீடியோ வைரலானது.
அதன் தொடர்ச்சியாக தற்போது ரஜினியின் Unseen புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் Unseen போட்டோ: தமிழ்த் திரையுலகின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டாரான ரஜினி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்ட ரஜினி, அடுத்து லால் சலாம் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். இந்தப் படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம், இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே லால் சலாம் படப்பிடிப்பில் மொய்தீன் பாய் லுக்கில் இருந்த ரஜினியின் வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் வைரலானது. லால் சலாம் படப்பிடிப்பு முடிந்ததும் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் அருங்காட்சியகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் சென்று பார்த்திருந்தார். சில தினங்களுக்கு முன்னர் இயக்குநர் எஸ்பி முத்துராமனுடன் ரஜினி அங்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏவிஎம் ஸ்டூடியோ உள்ளே அமைக்கப்பட்டுள்ள இந்த மியூசியம், கடந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்த பழைய கேமராக்கள், திரைப்பட தயாரிப்புக் கருவிகள், விண்டேஜ் ஸ்டைல் கார்கள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை ரஜினிகாந்த் மிகவும் நெகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தார்.
தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், MS குகன் ஆகியோர் ரஜினியை அருங்காட்சியகம் முழுவதையும் சுற்றிக் காட்டினர். ரஜினி ஏவிஎம் மியூசியத்தை சுற்றிப் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன. அதில் 4 புகைப்படங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஒரு போட்டோ வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. அதில், ரெட் கலர் MG காரில் ஏறுவதை போல கால் வைத்து செம்ம ஸ்டைலாக நிற்கிறார்.
ஒரு கையை காரின் ஸ்டீரியங்கிலும் இன்னொரு கையை தனது இடுப்பிலும் வைத்துக்கொண்டு செம்ம கெத்தாக மாஸ் காட்டுகிறார். இந்த போட்டோ ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏவிஎம் நிறுவனம் ரஜினியின் ஆரம்ப காலத்தில் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற இமேஜ் வரக் காரணமாக இருந்த பல படங்களை தயாரித்துள்ளது. அதில் முரட்டுக் காளை, போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், மனிதன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட படங்களை எஸ்பி முத்துராமன் தான் இயக்கியுள்ளார்.
இறுதியாக ஏவிஎம் நிறுவனத்துக்காக சிவாஜி படத்தில் நடித்துக் கொடுத்தார் ரஜினி. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் 2007ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ஏவிஎம் நிறுவனத்துக்கும் பல ஆண்டு பந்தம் இருப்பது திரையுலகம் அறிந்ததே. இந்தத் தருணத்தில் ஏவிஎம் மியூசியத்தை ரஜினி சுற்றிப் பார்த்தது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











