தர்பார் நடத்திவிட்டு இமய மலைக்கு கிளம்பும் ரஜினிகாந்த்?
சென்னை: தர்பார் படத்தில் நடித்து முடித்த உடன் இமய மலைக்கு கிளம்ப உள்ளாராம் ரஜினிகாந்த்.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு முடியப் போகிறது.

இதற்கிடையே ரஜினியின் இரண்டு ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் முருகதாஸ். தர்பார் பட வேலைகள் துவங்கியதில் இருந்தே புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து கசிந்து அவருக்கு பெரிய தலைவலியாக இருந்து கொண்டிருக்கிறது.
தர்பார் படத்தை அடுத்து ரஜினி யாராவது இளம் இயக்குநரின் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். தர்பார் பட வேலையை முடித்ததும் ரஜினி இமய மலைக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி இமய மலைக்கு சென்று தியானம் செய்வது ஒன்றும் புதிது அல்ல. அவர் அவ்வப்போது அங்கு சென்று வருகிறார். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள ரஜினி யோகா, தியானம் செய்யத் தவறுவது இல்லை. இமய மலையில் ரஜினியை பார்த்தால் இவர் சூப்பர் ஸ்டார் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு சாதாரணமாக உடை அணிந்து பாமரன் போன்று இருப்பார். அவரின் இந்த எளிமை தான் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நேரம் இருப்பதால் கட்சி துவங்கும் பணியை தள்ளிப் போட்டுவிட்டு தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினி. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறோம், ஜெயிக்கிறோம் என்று ரஜினி முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர். முருகதாஸ், ரஜினிகாந்த் சேர்ந்து படம் பண்ணுவார்கள் என்று கணித்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹசன் அந்த படம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி தான்.
பாலாஜி ஹசன் தீவிர ரஜினி ரசிகர் ஆவார். அவர் மட்டும் அல்ல அவரின் தந்தையும் ரஜினி ரசிகர் தான்.


Click it and Unblock the Notifications











