சௌபின் சாஹிரை வழுக்கை என சொன்ன ரஜினிகாந்த்.. சவாலுக்கு கூப்பிடும் ப்ளூ சட்டை மாறன்.. விடமாட்றாரே
சென்னை: கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது. ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே இதுவரை 100 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் எல்லாம் படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில் கூலி ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதை வைத்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டிருக்கிறார்.
ரஜினி நடித்திருக்கும் கூலி படத்தைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்திருக்கிறது. ரிலீஸ் நாளான ஆகஸ்ட் 14ஐ திருவிழா போல் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் செய்துவருகிறார்கள். முதன்முறையாக லோகியுடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பதால் படம் பட்டாசாக இருக்கப்போகிறது; கண்டிப்பாக விக்ரம் படத்தைவிடவும் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள்.
ஆயிரம் கோடி ரூபாய் வசூல்: அனைத்துக்கும் உச்சக்கட்டமாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதிருந்தே; கூலி படம் 1000 கோடி ரூபாயை வசூல் செய்யப்போகும் முதல் தமிழ் படமாக அமையும் என்ற ஆருடத்தையும் ஒருதரப்பினர் ஆணித்தரமாக வைத்துவருகிறார்கள். அதேசமயம் இந்த நம்பர் விளையாட்டுகளில் எப்போதுமே சிக்கிவிடக்கூடாது என்பதில் இயக்குநர் தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது.

முன்பதிவு எல்லாம் அபாரம்: படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங் தொடங்கி அதகளமாக நடந்துவருகிறது. பல தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டன. இதுவரை புக்கிங்கில் மட்டுமே 100 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது ஆதிகாரப்பூர்வமானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வட அமெரிக்காவில் 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சௌபின் சாஹிர் பற்றி: இதற்கிடையே கூலி படத்தில் பேசிய ரஜினிகாந்த், சௌபின் சாஹிரின் தலையை பற்றி பேசிய பேச்சு அவருக்கு பேக் ஃபயராக வந்திருக்கிறது. இந்நிலையில் அந்தப் பேச்சை மேற்கோள் காட்டி பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "எனக்கு வில்லன் சௌபின் சாஹிர் என லோகேஷ் கூறினார். என்னடா இது.. வழுக்கை தலையாக இருக்கிறாரே.. யார் இவர்? எனக்கெப்படி வில்லனாக நடிப்பார் என்று யோசித்தேன்.
பலரும் கிண்டல் செய்தார்கள்தான்: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என கூறியதால் ஓகே சொன்னேன் - கூலி ட்ரைலர் வெளியீட்டில் தலீவர் பேசியது. 75 வயதிலும் நீங்கள் டோப்பா வைத்துதான் நடிக்கிறீர்கள். ஆனால் முடியை நம்பி சோபின் நடிப்பதில்லை. தனது நடிப்பை மட்டுமே நம்புகிறார். வயது 41. Iyobinte Pusthagam, Sudani from Nigeria, Kumbalangi Nights போன்ற படங்களை பார்த்திருந்தால்.. இவர் யாரென்று தெரிந்திருக்கும். ஃபஹத் ஃபாசில் நடிக்க வந்தபோது அவருக்கு தலைமுடி குறைவாக இருந்ததை பலர் கிண்டல் செய்தனர்.
தில் இருந்தால் அப்படி நடியுங்கள்: செஞ்சிட்டு போங்க. நடிப்புல நான் யாருன்னு காட்டறேன் என சவால் விட்டு இன்றுவரை விக் வைக்காமல் நடித்து இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். வயது 43. உங்களுக்கு தில் இருந்தால் டோப்பா இல்லாமல் நடியுங்கள் ரஜினி. மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











