Rajinikanth: அயோத்தி படத்தை பாராட்டிய ரஜினி... நண்பர்ன்னு சொன்னதே மகிழ்ச்சி... சசிகுமார் நெகிழ்ச்சி!
சென்னை: சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மந்திரமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமாருடன் குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பாசிட்டிவான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

அயோத்தி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்: சசிகுமார் நடிப்பில் மார்ச் 3ம் தேதி வெளியான அயோத்தி திரைப்படம் தற்போது, ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங்காகிறது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. மத நல்லிணக்கம், மனிதம் என படம் நெடுக வெறுப்பு அரசியலுக்கு எதிரான படமாக அயோத்தி உருவாகியுள்ளது.
இந்நிலையில், அயோத்தி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், "அயோத்தி... நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயிலர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, சமீபத்தில் வெளியான மிக முக்கியமான படங்களையும் பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன் விடுதலை படத்தின் முதல் பாகத்தை பார்த்த ரஜினி, இயக்குநர் வெற்றிமாறன், சூரி, தயாரிப்பாளர் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது அயோத்தி படக்குழுவினருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
இதனையடுத்து, ரஜினியின் பாராட்டுக்கு சசிகுமாரும் தனது டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், "நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. மிக்க நன்றி சார்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ரஜினி, சசிகுமார் இருவரும் இணைந்து பேட்ட படத்தில் நடித்திருந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படம் 2020ம் ஆண்டு வெளியானது. ரஜினி காளி என்ற கேரக்டரிலும், சசிகுமார் மாலிக் பாத்திரத்திலும் நண்பர்களாக நடித்தனர். நண்பன் சசிகுமாரின் மகனை காப்பாற்ற ஆக்ஷன் அவதாரம் எடுப்பார் காளியான ரஜினிகாந்த். பேட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை அயோத்தி பட ப்ரோமோஷனில் சசிகுமார் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக பேட்ட படத்தில் சசிகுமாரின் கேரக்டர் மாலிக், அதேபோல் அயோத்தி படத்திலும் அவரது பாத்திரத்தின் பெயர் அப்துல் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சசிகுமாரின் கேரியரில் சிறப்பான படமாக வெளியான அயோத்தி, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னொரு அங்கீகாரமாக சூப்பர் ஸ்டார் ரஜினியும் பாராட்டியுள்ளது வைரலாகி வருகிறது.

அயோத்தி படத்தில் சசிகுமார் அப்துல் மாலிக் என்ற கேரக்டரில் நடித்துள்ளதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே ரஜினியும் லால் சலாம், தலைவர் 170 படங்களில் முஸ்லீம் பெயர் கொண்ட கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. பாட்ஷா படத்திற்குப் பிறகு ரஜினி முஸ்லீம் கேரக்டரில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











