Rajinikanth: மிகப்பெரிய கல்வி நிறுவனம் தொடங்கும் ரஜினி? மோகன்பாபு பல்கலைக்கழகத்துக்கு திடீர் விசிட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். கூலி படம் மட்டும் இல்லாமல், அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமிட் ஆகியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தையும், கூலி படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கின்றன. இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசை அமைக்கிறார். ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு பொங்கல் விடுமுறையில் வெளியானது. இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபு விற்கு சொந்தமான பல்கலைக் கழகத்தைச் சென்று பார்த்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மோகன் பாபுவும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் நெருங்கிய நண்பர்கள். எந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்கள் என்றால், ' வாடா போடா’ என அழைத்துக் கொள்ளும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள். ரஜினி படப்பிடிப்பு வேலைக்காகவோ அல்லது வேறு வேலையாக ஹதாராபாத் சென்றால், அவரை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்பார் மோகன் பாபு. அதேபோல், மோகன் பாபு சென்னைக்கு எப்போது வந்தாலும், ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டில் தான் தங்குவார். அந்த அளவுக்கு இருவரும் ஒருவர் மீது மற்றொருவர், பேரன்பு வைத்துள்ளார்கள்.

இப்படியான நிலையில் தற்போது தாய்லாந்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரே, சூப்பர் ஸ்டார் அங்கு சென்று விட்டார். படப்பிடிப்பு முடிந்து அனைவரும் இந்தியா திரும்பியுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள பாபா ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியானது.
மோகன் பாபு: அதேபோல் திருப்பதியில் உள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார், மோகன் பாபுவின் பல்கலைக் கழகமான, மோகன் பாபு பல்கலைக் கழகத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று, பார்த்துள்ளார். பல்கலைக் கழகத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை ராஜ மரியாதை அளித்து வரவேற்றுள்ளார், மோகன் பாபு. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரஜினி - மோகன் பாபு: அதாவது மோகன் பாபு பல்கலைக்கழக வளாகம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அதனைப் பார்க்க ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துடன் சென்றார். பல்கலைக்கழகத்தில் உள்ள வகுப்பறைகள், நூலகங்கள், கேண்டீன், ஆய்வகங்கள் என அனைத்தையும் பார்வையிட்டார். மேலும் மோகன் பாபுவுடன் நீண்ட நேரம் செலவிட்ட ரஜினிகாந்த், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த விநாயகர் கோவிலில் வழிபட்டார். வர வைக்கும் போது மலர் தூவி, மாலை அணிவித்து வரவேற்ற மோகன் பாபு, ரஜினி வழி அனுப்பி வைக்கும் போது, அவரை ஆரத் தழுவி வழி அனுப்பினார். மோகன் பாபுவின் காலில் விழுந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரஜினி கல்வி நிறுவனம்: வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலர், ரஜினியும் இதேபோல் மிகப்பெரிய கல்வி நிறுவனம் நிறுவ திட்டமிட்டுள்ளார். அதனால்தான் நேரில் சென்று பார்த்துள்ளார் என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் சிலர், மோகன் பாபு பல்கலைக்கழகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதை விளம்பரப்படுத்த ரஜினியை வரவழைத்து, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தனது பல்கலைக் கழகத்திற்கு தனி விளம்பரத்தை ஏற்படுத்தியுள்ளார் மோகன் பாபு என பேசி வருகின்றனர். ரஜினியும் மோகன்பாபுவும் வந்ததை தெரிந்து கொண்ட, ரசிகர்கள் அவர்களைப் பார்க்க திரண்டனர்.


Click it and Unblock the Notifications











