வான்கடே மைதானத்தில் என்ட்ரியான ரஜினி... ஆஸி பேட்ஸ்மேன்களை புரட்டி எடுத்த இந்திய பவுலர்கள்!
மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, முதலில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது.
அதனைத் தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
இப்போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நேரில் சென்று பார்த்து ரசித்தார்.

முதல் ஒருநாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியே கிரிக்கெட் அணி, முதலில் பர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதனை 1 - 2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணியும், ஸ்மித் கேப்டன்ஷியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் விளையாடியது.

சூப்பர் ஸ்டார் ரஜினி
இந்தப் போட்டியை பார்க்க வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து தனது மனைவி லதாவுடன் மும்பை பறந்த ரஜினியை, விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மஹாராஷ்டிரா கிரிக்கெட் வாரியத் தலைவர் அமோல் கேல். அதன் தொடர்ச்சியாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார்

தலைவா இன் தி ஹவுஸ்
வான்கடே மைதானத்தில் ரஜினி கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்கும் போட்டோவை மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. அதில், 'தலைவா இன் தி ஹவுஸ்' என்ற கேப்ஷனுடன், ரஜினியும், மஹாராஷ்டிரா கிரிக்கெட் வாரியத் தலைவர் அமோல் கேலும் ஒன்றாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளது. இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் இந்த போட்டோவை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ஃபார்ஸ்ட் பவுலர் ரஜினி
ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படம் கிரிக்கெட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மிர்ச்சி சிவா கொடுத்த பேட்டி ஒன்றில், இளம் வயதில் தான் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என ரஜினி சார் தன்னிடம் கூறியதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்தது.

இந்திய பவுலர்கள் அசத்தல்
கேப்டன் வார்னருக்குப் பதிலாக ஸ்மித் தலைமையில் களமிறங்கிய ஆஸி அணி, முதலில் அதிரடியாக விளையாடியது. இதனால் 300 ரன்களுக்கும் மேல் ஸ்கோர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய பவுலர்கள் சமி, சிராஜ் ஆகியோரின் அசத்தல் பந்துவீச்சால் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பேட்டிங் பிச்சான வான்கடே மைதானத்தில் எளிதான ஸ்கோருடன் களமிறங்கிய இந்திய அணி, வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது. இதனிடையே, விரைவில் ஐபிஎல் தொடங்கவுள்ளதால், சென்னையில் நடக்கும் போட்டிகளை ரஜினி நேரில் பார்க்க வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











