Coolie Trailer - எடுடா கொக்கிய.. அடி பொலி.. பட்டையை கிளப்பும் கூலி ட்ரெய்லர்.. ரஜினிக்கு என்ன எனர்ஜி ப்பா
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதன்முறையாக லோகேஷ் கனகராஜும், ரஜினியும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. இன்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கும் சூழலில் கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிக்கு வயது இப்போது 74 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாக நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க கமிட்டனார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இந்த மாதம் ரிலீஸ்: இதில் ரஜினியுடன் சத்யராஜ், அமீர் கான், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். படமானது இந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. அன்றைய நாளை திருவிழா போல் கொண்டாடுவதற்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இப்போதிருந்தே தயாராகிவருகிறார்கள்.

என்ன கதை?: லோகேஷின் படங்கள் என்றாலே போதை பொருட்களும், துப்பாக்கி சத்தங்களும் அதிகம் இருக்கும் என்ற பேச்சு ஓடுகிறது. ஆனால் அப்படி எதுவுமே இந்தப் படத்தில் இல்லை என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தினார். எனவே இது எந்த மாதிரியான கதையாக உருவாகியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகம் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என்ற ஆரூடங்களும் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வெளியான ட்ரெய்லர்: இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கூலி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கும்போது, இப்படமும் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைதான் என புரிகிறது. முக்கியமாக ரஜினியின் எனர்ஜி இன்னமும் துளிகூட குறையவில்லை. இவருக்கு வயது ஆகுமா ஆகாதா என்ற கேள்விதான் இந்த ட்ரெய்லரை பார்க்கையில் எழுகிறது. முக்கியமாக படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கையில் பிடிக்க முடியாத அளவுக்கு உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
ஆடியோ வெளியீட்டு விழா: முன்னதாக கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட கூலி படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். இதில் ரஜினியின் பேச்சு என்னவாக இருக்கும் என்பதுதான் பலரது ஆவலாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் என்பதால் அதனை மையப்படுத்தி நகைச்சுவையாக பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











