ரஜினிகாந்தின் ஆருயிர் தோழர் துவாரகிஷ் காலமானார்.. 'நான் அடிமை இல்லை’ பட இயக்குநர் இவர்தான்!
பெங்களூர்: கன்னட நடிகரும் இயக்குநருமான துவாரகிஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி தன்னை சோகத்தில் ஆழ்த்தியதாக நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கண்டக்டராக வேலை பார்த்த ரஜினிகாந்துக்கு அங்கே சினிமாவிலும் பொதுவெளியிலும் ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர். காமெடி நடிகராக கன்னட சினிமாவில் அறிமுகமாகி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பல ஆண்டுகள் சினிமாவில் வலம் வந்த துவாரகிஷ் மறைவு ரஜினிகாந்தை ரொம்பவே வாட்டி வதைத்து விட்டதாக கூறுகின்றனர்.

திருமணம், பிரபலங்கள் மறைவு என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறார் ரஜினிகாந்த். வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும், இரங்கல் தெரிவிப்பது, நல்ல படங்கள் வந்தால் பார்த்து விட்டு பாராட்டுவது என எதையுமே அவர் மிஸ் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட நடிகர் காலமானார்: நடிகர் ரஜினிகாந்தின் நீண்ட நாள் நண்பரும் கன்னட நடிகருமான துவாரகிஷ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. கன்னட திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமான துவாரகிஷ் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பிரபலமானார். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி மைசூரில் பிறந்த அவர் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் இன்று காலமானார்.

ரஜினிகாந்த் இரங்கல்: என்னுடைய நீண்ட நாள் நண்பரான துவாரகிஷ் மறைவு செய்தி என்னை ரொம்பவே வேதனையடைய செய்திருக்கிறது. சாதாரண காமெடி நடிகராக சினிமாவில் நுழைந்த அவர் தன்னை தானே உயர்த்திக் கொண்டு பெரிய புரொட்யூசராகவும் டைரக்டராகவும் மாறினார். அவருடன் இருந்த நல்ல நினைவுகள் வந்து போகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

நான் அடிமை இல்லை பட இயக்குநர்: 1964ம் ஆண்டு வெளியான வீர சங்கல்பா எனும் படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமான துவாரகிஷ் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஆட்டகாரா படம் வரை நடித்துள்ளார். 1966ம் ஆண்டு வெளியான மமதேய பந்தனா படத்தை தயாரித்த துவாரகிஷ் கன்னடத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். 1985ம் ஆண்டு விஷ்ணுவர்தன் நடித்த நீ பாரேடா காதம்பரி படத்தை இயக்கிய இவர் நீ தாண்டா கனிகே, ரஜினிகாந்த் நடித்து வெளியான நான் அடிமையில்லை, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். பிரியாமணி டபுள் ஆக்ஷனில் நடித்த சாருலதா படத்தையும் தயாரித்தவர் இவர் தான்.


Click it and Unblock the Notifications











