Thalaivar 170: வேகமெடுக்காத விடாமுயற்சி.. தலைவர் 170-ஐ கையில் எடுத்த லைகா.. டைட்டில் இதுதானா?
சென்னை: நடிகர் அஜித் விடாமுயற்சி படத்துக்கு முன்பாக அவரது பைக் டாக்குமென்ட்ரி படத்தை முடிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருவதாகவும் அதனால் லைகா நிறுவனம் விடாமுயற்சியை அப்படியே விட்டு விட்டு தலைவர் 170 படத்திற்கு முழு ஃபோகஸையும் திருப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் முக்கால்வாசி பிரம்மாண்ட படங்களை லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து, இந்தியன் 2, சந்திரமுகி 2, லால் சலாம் என பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

மேலும், விடாமுயற்சி, தலைவர் 170 உள்ளிட்ட பெரிய படங்களையும் லைகா நிறுவனம் உருவாக்கி வருகிறது. லால் சலாம், இந்தியன் 2 ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், அடுத்தபடியாக விடாமுயற்சி பக்கம் லைகா கவனத்தை திருப்பும் என எதிர்பார்த்தால், தலைவர் 170 பக்கம் சென்று விட்டதாக கூறுகின்றனர்.
ஜெய்பீம் இயக்குநர் இயக்கத்தில்: நடிகர் சூர்யாவை வைத்து இயக்குநர் தா.செ. ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் வரை அங்கீகாரம் பெற்றது. அதன் யூடியூப் சேனலில் ஜெய்பீம் படத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டு இருந்தனர். நாமினேஷனில் இடம்பெறவில்லை என்றாலும், ஆஸ்கர் குழுவினர் பலரது பாராட்டுக்களை அந்த படம் அள்ளியது.
மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், சூர்யா என அந்த படத்தில் நடித்த அனைவரது கதாபாத்திரமும் உலகளவில் பேசப்பட்டது. அரசியல் ரீதியாகவும் ஏகப்பட்ட சர்ச்சைகளை அந்த படம் கிளப்பிய நிலையில், தற்போது அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து தா.செ. ஞானவேல் படம் இயக்கப் போகிறார்.
லோகேஷ் கனகராஜ் படத்துக்கு முன்னதாக: லியோ படத்தை முடித்து விட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தலைவர் 170 படத்தை முடித்து விட்டே லோகேஷ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.
தா.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தையே குறைவான நாட்களில் எடுத்து முடித்த நிலையில், ரஜினிகாந்த் படத்தையும் செம ஸ்பீடாக இயக்கி முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

விடாமுயற்சியை விட்டுவிட்டு: லைகா நிறுவனம் இந்த ஆண்டு முழுவதுமே விடாமுயற்சிக்காக ஏகப்பட்ட மாதங்களை வீணடித்து விட்டது. ஆனால், இன்னமும் நடிகர் அஜித் தனது பைக் பயணத்தை முடித்து விட்டு ஷூட்டிங்கிற்கு திரும்பவில்லை என்கின்றனர்.
இன்னொரு பக்கம் மகிழ் திருமேனியின் திரைக்கதையில் திருப்தி இல்லை என்றும் இன்னமும் மெருகேற்ற சொல்லிவிட்டு அஜித் பைக் டூர் கிளம்பியதாக கூறுகின்றனர். இந்நிலையில், தலைவர் 170 படத்தை முழு வீச்சில் உருவாக்க லைகா திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைவர் 170 டைட்டில் லீக்: தலைவர் 170 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெய்பீம் படத்தில் நீதியரசர் சந்துருவின் கதையை எடுத்துக் கொண்டு படமாக்கிய ஞானவேல், இந்த படத்திலும் ரியல் லைஃப் போலீஸ் அதிகாரியை இன்ஸ்பயர் செய்தே திரைக்கதையை உருவாக்கி உள்ளார் என்றும் படத்திற்கு வேட்டையன் என்கிற டைட்டில் வைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கி வரும் படத்துக்கு வேட்டையன் என்கிற டைட்டில் புக் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த டைட்டிலின் உரிமையை பெற லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தலைவர் 170 படத்தின் டைட்டில் வேட்டையனாக இருக்கக்கூடும் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. சந்திரமுகி படத்தில் வேட்டையனாக நடித்ததே ரஜினிகாந்த் என்பதால், நிச்சயம் அந்த டைட்டில் கச்சிதமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











