பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் அனைத்துமே பழைய படங்களின் கதைதான் என்றும் அவர் டைட்டில் வைக்கும் முறை கூட ஏதும் புதிதல்ல என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாநகரம் - மாநகர காவல் படத்தில் இருந்து வந்தது என்றும் கைதி - ஒரு கைதியின் டைரி, மாஸ்டர் - வாத்தியார், விக்ரம் - கமல் நடித்த விக்ரம், லியோ - பழைய ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் ரீமேக் மற்றும் தற்போது ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி - சரத்குமார் நடித்த கூலி டைட்டில் எனக் கூறுகின்றனர்.
டைட்டில் மட்டுமின்றி படங்களின் கதையும் லோகேஷ் கனகராஜ் அட்லீ போல சுட்டுத்தான் எடுக்கிறார் என்றும் சொந்த சரக்கு இல்லை என்று கூறுகின்றனர். மம்மூட்டியின் மலையாள படத்தை அப்படியே சீன் பை சீன் சுட்டுத்தான் மாஸ்டர் எடுத்தார் என ரசிகர்கள் கம்பேர் வீடியோ வெளியிட்ட நிலையில், ரஜினிகாந்த் நடித்த 'தீ' படத்தின் கதை தான் 'கூலி' என்றும் அதே போலத்தான் காட்சிகள் உள்ளன என்று ரஜினிகாந்த் ரசிகர்களே அக்குவேர் ஆணிவேராக பிரித்து மேய்ந்து விட்டனர்.

தீ படத்தின் காப்பியா கூலி?: தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் எனும் ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் என அவரே சொன்ன நிலையில், கூலி படம் தீ படத்தின் இன்ஸ்பிரேஷனா? அல்லது அந்த படத்தின் அடுத்த பாகமா? என்கிற கேள்வியை தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
கதை அப்படியே இருக்கே பாஸ்?: தீ படத்தில் ஆரம்பத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூலியாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அதன் பின்னர், தங்க கடத்தல் பிசினஸில் ஈடுபட்டு கேங்ஸ்டராக மாறுவார். அவரது தம்பி போலீஸ் அதிகாரியாக மாறும் நிலையில், அண்ணனை பிடிக்க முயற்சி செய்வார். தீ படத்தில் ஹார்பரில் தங்கம் கடத்தும் போது சூப்பர் ஸ்டார் சண்டை போடும் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தான் கூலி படத்தின் இன்ட்ரோ டீசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியையும் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தையும் அந்த படத்துடன் கம்பேர் செய்து வருகின்றனர். கூலி பேட்ஜ் அந்த படத்தில் ரஜினிகாந்தின் உயிரை ஒருமுறை காப்பாற்றும், அதே போல பேட்ஜ் அணிந்துக் கொண்டு அதில், ரத்தம் படிந்திருக்க அதை துடைத்துக் கொண்டு வருவது போல கூலி படத்தின் காட்சிகளை லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார் என ரசிகர்கள் டிகோட் செய்துள்ளனர்.
தீ படமே தீவார் ரீமேக்: 1981ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தீ படமே 1975ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான தீவார் படத்தின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் புதிதாக எதையும் சிந்திக்காமல் அன்பறிவ் மாஸ்டர்களை வைத்து பழைய படங்களை புதிதாக ஆக்ஷன் காட்சிகளுடன் மட்டுமே உருவாக்கி வருகிறாரா? என்கிற விமர்சனங்களையும் நெட்டிசன்கள் முன் வைத்து வருகின்றனர். ரஜினிகாந்த் படத்தின் தலைப்புகளை இளம் நடிகர்கள் தங்கள் படங்களுக்கு வைத்து வந்த நிலையில், ரஜினிகாந்த் படத்துக்கே சரத்குமார் படத்தின் டைட்டிலை வச்சிருக்காரே லோகேஷ் கனகராஜ் என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











