ரஜினியின் வேட்டையன்.. வரிசையாக வருது அப்டேட்டுகள்.. ஆடியோ லான்ச் எந்த தேதியில் தெரியுமா?
சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. மனசிலாயோ என்ற அந்தப் பாடல் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது வெளியாகின்றன என்பது குறித்த தகவல்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க கமிட்டானார். லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜெய்பீம் இயக்குநருடன் ரஜினி முதன்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. இது ஞானவேல் ஸ்டைலில் இருக்குமா இல்லை ரஜினி ஸ்டைலில் இருக்குமா என்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்ப ஆரம்பித்தனர்.

இரண்டும் கலந்த கலவை: சூழல் இப்படி இருக்க வேட்டையன் படத்தின் டைட்டில் இண்ட்ரோ வீடியோ வெளியானது. அதில் குறி வெச்சா இரை விழணும் என்ற பஞ்ச் இடம்பெற்றிருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் இது முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைலில் உருவாகியிருக்குமோ என்று சந்தேகம் கிளப்பினர். ஆனால் அப்படி இல்லை ரஜினிக்காக சில போர்ஷன்கள் கமர்ஷியலாக இருக்கின்றன. அதேசமயம் ஞானவேல் தனது பாணியையும் இதில் விடவில்லை. உண்மையாக நடந்த போலி என்கவுன்ட்டரை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
படம் ரிலீஸ்: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. ரஜினிகாந்த் தனது பகுதிக்கான டப்பிங்கை அண்மையில் முடித்தார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் டப்பிங்கின்போது ஒரு காட்சியை பார்த்துவிட்டு இயக்குநரை ரஜினிகாந்த் மனம் திறந்து பாராட்டியது பலரது கவனத்தை ஈர்த்தது. படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
மனசிலாயோ: படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாடலான மனசிலாயோ என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. வழக்கமான அனிருத் ரக பாடலாக அது அமைந்திருந்தாலும் அதில் ரசிகர்களை இரண்டு விஷயங்கள் கவர்ந்தன. முதலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்தது. கடைசியாக ரஜினிக்கு அருணாச்சலம் படத்தில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடலுக்கு குரல் கொடுத்திருந்தார் வாசுதேவன்.
அடுத்ததாக மஞ்சு வாரியர். பாடலின் லிரிக்கல் வீடியோவில் மஞ்சு வாரியர் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு சிகப்பு நிற சேலையில் ஆடிய நடனம் பெரிதும் கவர்ந்துவிட்டது. அதனைப் பார்த்த பலரும் மஞ்சுவுக்கு 46 வயது என்று நம்பவே முடியவில்லை. அவ்வளவு க்யூட்டாக இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆர்மபித்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரிலீஸாகும் தேதி குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன.
அடுத்தடுத்த அப்டேட்டுகள்: அதன்படி படத்தின் இரண்டாவது சிங்கிள் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவிருக்கிறதாம். அதேபோல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அக்டோபர் இரண்டாம் தேதி நடத்துவதற்கு படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு ரஜினிகாந்த்தும் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆடியோ லான்ச்சில் தலைவர் என்ன குட்டி கதை சொல்லப்போகிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











