Hunter Vantaar.. வெளியானது வேட்டையன் இரண்டாவது சிங்கிள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் படத்தின் இரண்டாவது சிங்கிளான Hunter Vantaar என்ற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று மாலை நடைபெறவிருக்கிறது.
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க கமிட்டானார். லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜெய்பீம் இயக்குநருடன் ரஜினி முதன்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. இது ஞானவேல் ஸ்டைலில் இருக்குமா இல்லை ரஜினி ஸ்டைலில் இருக்குமா என்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்ப ஆரம்பித்தனர்.

இரண்டும் கலந்த கலவை: சூழல் இப்படி இருக்க வேட்டையன் படத்தின் டைட்டில் இண்ட்ரோ வீடியோ வெளியானது. அதில் குறி வெச்சா இரை விழணும் என்ற பஞ்ச் இடம்பெற்றிருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் இது முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைலில் உருவாகியிருக்குமோ என்று சந்தேகம் கிளப்பினர். ஆனால் அப்படி இல்லை ரஜினிக்காக சில போர்ஷன்கள் கமர்ஷியலாக இருக்கின்றன. அதேசமயம் ஞானவேல் தனது பாணியையும் இதில் விடவில்லை. உண்மையாக நடந்த போலி என்கவுன்ட்டரை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
படம் ரிலீஸ்: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. ரஜினிகாந்த் தனது பகுதிக்கான டப்பிங்கை அண்மையில் முடித்தார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் டப்பிங்கின்போது ஒரு காட்சியை பார்த்துவிட்டு இயக்குநரை ரஜினிகாந்த் மனம் திறந்து பாராட்டியது பலரது கவனத்தை ஈர்த்தது. படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
மனசிலாயோ: படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாடலான மனசிலாயோ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. வழக்கமான அனிருத் ரக பாடலாக அது அமைந்திருந்தாலும் அதில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் கொண்டு வந்திருந்தனர். அது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாடலும் ஹிட்டடித்து பலரும் அதனை ரீல்ஸாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
இரண்டாவது சிங்கிள்: இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகும் என்று அனிருத் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதன்படி Hunter Vantaar என்ற பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. பாடலை சித்தார்த் பஸ்ரூர் பாடியிருக்க; தெருக்குரல் அறிவு எழுதியிருக்கிறார். இந்தப் பாடலும் வழக்கமான அனிருத் ஸ்டைலில் இருக்கிறது. மேலும் பாடலில் ரஜினியை துதிபாடும்படியான வரிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இப்பாடலும் வரவேற்பை பெற ஆரம்பித்திருக்கிறது. அதேசமயம் ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலை இது நினைவுப்படுத்துவதாகவும் குரல்கள் கேட்க ஆர்மபித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











