விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணம்.. கரூரில் நடந்த துயரம்.. ரஜினியின் மனைவி வேதனையின் உச்சத்தில் பேசிருக்காங்க
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருப்பதால் எப்படியாவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற முனைப்பில் பயணத்தை ஆரம்பித்த அவருக்கு; கரூர் ஒரு துக்கத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் மனைவி இதுகுறித்து பேசியிருக்கிறார்.
விஜய்யும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகமும்தான் நேற்று முன்தினம் இரவிலிருந்து தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தலைப்பு செய்திகள். உங்க விஜய் நா வரேன் என்ற பெயரில் வாராவாரம் தொண்டர்களை சந்திக்கும் விஜய்; கடந்த சனிக்கிழமை நாமக்கல், கரூர் மாவட்ட தொண்டர்களை சந்திக்க சென்றார். காலை 8.45 மணிக்கு நாமக்கல்லிலும், மாலை 5 மணிக்கு கரூரிலும் அவர் பேசுவதாகத்தான் ஏற்பாடு.
தாமதப்படுத்திய விஜய்: ஆனால் விஜய்யோ சென்னையிலிருந்தே காலை 8.45 மணிக்குத்தான் புறப்பட்டார். இது தெரியாத மக்களோ விஜய்யை நேரில் பார்க்கப்போகிறோம் என்ற ஆவலோடு நீண்ட நேரம் காத்திருந்தார்கள். காலையே தாமதம் ஆனதால் மாலையிலும் சொன்ன நேரத்துக்கு கரூருக்கு அவரால் வரமுடியவில்லை. அங்கும் தாமதமாக ஏழு மணிக்கு வந்து சேர்ந்தார். இதற்கிடையே அந்தப் பகுதியில் கூட்டம் அலைகடலென திரண்டுவிட்டது.

பாட்டில்களை வீசிய விஜய்: கரூரில் அவர் பேச ஆரம்பித்தபோதே கூட்ட நெரிசலில் பலர் சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அங்கிருந்தவர்களில் சிலர் தண்ணீர் தண்ணீர் என கேட்க; விஜய்யேகூட பேருந்தில் இருந்தபடி வாட்டர் பாட்டில்களை தூக்கி வீசினார். சில நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து விஜய் புறப்பட்டு விமான நிலையத்துக்கு சென்றுவிட்டார். ஆனால் நெரிசலில் சிக்கியவர்களின் நிலைமை விபரீதத்தில் சென்று முடிந்தது.
40க்கும் மேற்பட்டோர் பலி: இதுவரை மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். உயிரிழப்பு செய்தி வெளியான சமயத்தில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசக்கூட செய்யாமல் இடத்திலிருந்து நழுவிய விஜய்க்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். அவரும் சென்னைக்கு சென்ற பிறகு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
லதா ரஜினிகாந்த் பேச்சு: இதுவரை நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை விஜய் பார்க்கவில்லை. இந்த கரூர் கோர சம்பவம் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை எந்த திசையில் அழைத்து செல்லுமோ தெரியவில்லை. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் மனைவியான லதா இதுகுறித்து வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில், " என் அன்பான தமிழ் மக்களே எங்கு கூட்டம் சேர்ந்தாலும் பாதுகாப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள். குழந்தைகள், பெண்களால் கடைசி நிமிடத்தில் ஓட முடியாது. நெரிசல் ஏற்பட்ட பிறகு அந்த இடத்திலிருந்து நகர்வது கடினமான ஒன்று.
என்ன தவறு செய்தார்கள்?: நாம் தொலைத்த குழந்தைகள் எல்லாம் என்ன தவறு செய்தார்கள். அவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பற்றி என்ன தெரியும்? அவர்கள் இன்று இல்லை என்பதை நினைக்கும்போது மனம் பதறுகிறது. இனியும் இப்படியொரு துயரம் நிகழாமல் இருக்க அரசு, மக்கள், காவல் துறை, நிகழ்ச்சி நடத்துபவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதில் நாம் எப்படி ஒற்றுமையோடும் கட்டுப்பாடோடும் நடக்க வேண்டும் என மக்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களை நினைத்து நம் மனம் தவிக்கத்தான் முடியும். இனியும் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமை" என்றார்.


Click it and Unblock the Notifications











