Rajinikanth: ரஜினிகாந்த் இனி எந்த தேர்தலிலும் யாருக்கும் ஆதரவு தரமாட்டார்.. சத்திய நாராயணா பேட்டி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளி மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. தொடர்ந்து தலைவர் 170 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
நீண்ட காலங்களாக ரஜினியின் அரசியல் பிரவேசம் நெடுங்கதையாக தொடர்ந்து வந்த நிலையில், அவர் அரசியல் கட்சி துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ரஜினி இனி எந்த தேர்தலிலும் யாருக்கும் ஆதரவு தரமாட்டார் என அவரது சகோதரர் உறுதி: சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் ரஜினிகாந்த். இவரது ரசிகர்கள் ஜப்பான் உள்ளிட்ட தமிழ் மொழியை அறியாத நாடுகளிலும் அதிகம். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவரது ரசிகர்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. இதையொட்டி ரஜினி பல சந்தர்ப்பங்களில் பேசியும் வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சி துவங்கவும் ரஜினிகாந்த் முயற்சிகளை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் ஜெயிலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அரசியலில் நிலவிவரும் வெற்றிடம் குறித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சி துவங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். தன்னுடைய கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்றும் கூறிய நிலையில், அந்த முயற்சியை கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டது.
அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினார். ஆனாலும் தற்போது வரை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் அவரது ரசிகர்கள் உறுதியாக உள்ளனர். இதனிடையே சமீபத்தில் இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த், அந்தப் பயணத்தை தொடர்ந்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்திருந்தார். அவரது காலில் விழுந்து ரஜினிகாந்த் வணங்கியது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சில அரசியல்கட்சித் தலைவர்களையும் ரஜினி சந்தித்திருந்தார்.

ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் தங்களது கட்சிக்காவது ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் இனி எந்த தேர்தலிலும் யாருக்கும் ஆதரவு தர மாட்டார் என்று ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், விழுப்புரத்தில் பேட்டியளித்துள்ளார். விழுப்புரத்தில் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரஜினி தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற கனவு அரசியல் கட்சிகளிடையே காணப்பட்டது.
ஆனால் தற்போது அது இனிமேல் நடக்காது என்பதை ரஜினியின் சகோதரர் உறுதிப்படுத்தியுள்ளார். 70 வயதுகளை கடந்த ரஜினிகாந்த், தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வயதிலும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்குபவராக உள்ளார் ரஜினிகாந்த். அவரது ஜெயிலர் படம் மாஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், விரைவில் தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜூடனும் இணையவுள்ளார். இந்தப்படம் தற்போதே மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











