Vettaiyan: கடப்பா டூ ஹைதராபாத் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினி... இறுதிக்கட்டத்தை நெருங்கிய வேட்டையன்
ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆந்திராவின் கடப்பா பகுதியில் நடைபெற்று வந்தது. கடப்பா ஷெட்யூல் முடிவுக்கு வந்ததை அடுத்து வேட்டையன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. அதுகுறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதிக்கட்டத்தில் வேட்டையன்
சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள லால் சலாம் வரும் 9ம் தேதியான நாளை மறுநாள் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ரஜினி, தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

தசெ ஞானவேல் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகிறது வேட்டையன். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர், அனிருத் இசையமைத்து வருகிறார். லால் சலாம் படத்தில் மரண தண்டனைக்கு எதிராக போராடும் ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக ரஜினி நடித்து வருகிறாராம்.
இதனால் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி, வசனங்களும் தீயாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வேட்டையன் ஷூட்டிங் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக ஆந்திராவின் கடப்பா பகுதியில் நடைபெற்று வந்தது. இந்தப் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து இன்று முதல் ஹைதராபாத் சென்றுள்ளது படக்குழு.
அங்கு ரஜினியின் காட்சிகளை படமாக்கவுள்ளாராம் தசெ ஞானவேல். ஒரே ஷெட்யூலாக 15 நாட்கள் நடைபெறும் வேட்டையன் படப்பிடிப்பு இதோடு முடிவுக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஒரே கட்டமாக வேட்டையன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்டு ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் செய்யப்பட்டுள்ளதாம்.
வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதால், லோகேஷின் தலைவர் 171 டீம் ரஜினிக்காக காத்திருக்க தொடங்கிவிட்டது. வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததும் தலைவர் 171 படத்துக்கு பூஜை போடப்படும் எனவும், அதன்பின்னர் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்கவும் லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.


Click it and Unblock the Notifications











