இஷ்டத்துக்கு படம் செய்கிறார்கள்.. யாரும் அடிமை இல்லை.. வெற்றிமாறனை விமர்சித்த விடுதலை 2 நடிகர்?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் விடுதலை 2. இதில் சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், சேத்தன், மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. சூழல் இப்படி இருக்க படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
பாலு மகேந்திரா, கதிர் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்து பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக ஆடுகளம் படம் ஏராளமான தேசிய விருதுகளை வென்றது. அதேபோல் அசுரன் திரைப்படமும் தேசிய விருதை வென்றது. இதற்கிடையே விசாரணை திரைப்படம் சர்வதேச அளவில் சில விருதுகளையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை: சூழல் இப்படி இருக்க ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி விடுதலை படத்தை உருவாக்கினார் வெற்றி. அதில் சூரியை கதையின் நாயகனாக மாற்றினார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அந்தப் படம்தான் சூரியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. அதேபோல் நடிகர் சேத்தனுக்கும் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து விடுதலை 2 படத்தை இயக்கினார். அந்தப் படம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸானது.
கலவையான விமர்சனம்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படம் முழுக்க முழுக்க பிரசார தொனியில் இருந்ததாகவும் ஒரு விமர்சனம் வந்தது குறிப்பிடத்தக்கது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் பொறுத்தவரை ஹைலைட்டுகளில் ஒருவராக இருந்தவர் யார் என்றால் அது ராஜீவ் மேனன்தான். குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் வலம் வந்த அவர்; இதில் நடிகராகவும் அறிமுகமாகி பக்காவாக ஸ்கோர் செய்திருந்தார்.
ராஜீவ் மேனன் பேட்டி: இந்நிலையில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜீவ் மேனன் பேசுகையில், "மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களுடன் நான் பணியாற்றும்போது எப்படி ஷூட்டிங் நடக்கும் என்பது தெரியும். இப்போதோ ஒரு ப்ளானிங் இல்லாத நிலைக்கு சினிமா சென்றுகொண்டிருக்கிறது. படத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்; எடுத்துக்கொண்டே இருக்கலாம்; எது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நிலை டிஜிட்டல் வந்துவிட்டதால் இருக்கிறது.
அடிமை இல்லை: இந்த ஒரு படம்தான் நமக்கு இருக்கிறது என்றால் இந்த நிலைக்கு அடாப்ட் ஆகலாம். ஆனால் வெஸ்டர்ன் கலாசார சினிமா இங்கு சாத்தியமில்லை. இரண்டு ஆண்டுகள்வரை ஒரு படத்தை எடுக்கும் இயக்குநர்கள், எங்கள்கூடவே ட்ராவல் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். என்ன ட்ராவல் செய்ய வேண்டும். இது ஷூட்டிங். நான் ஒன்றும் உங்களுக்கு அடிமை இல்லை. எனக்கு ஐடியா வரும்போதுதான் ஷூட்டிங் செய்வேன் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
வெற்றிமாறன் மீது அட்டாக்?: சினிமா என்பது 200 பேர் அடங்கிய ஒன்று. சரியான் ப்ளானிங் இல்லையென்றால் படம் எடுக்க முடியாது. ஜுராசிக் பார்க் திரைப்படம் 78 நாட்கள் ப்ளான் செய்யப்பட்டு 72 நாட்களில் முடிந்தது. இங்கு நாம் ப்ளானிங்கே இல்லாமல் ஷூட்டிங் நடத்துவதால் தயாரிப்பாளர்தான் பாதிக்கப்படுகிறார்" என்றார். ராஜீவ்வின் பேட்டி பல்வேறு கேள்விகளை ரசிகர்களிடம் எழுப்பியிருக்கிறது. அதாவது விடுதலை படத்தை முடிப்பதற்கு வெற்றிமாறன் ரொம்பவே டைம் எடுத்துக்கொண்டார். உதாரணத்துக்கு விஜய் சேதுபதியிடம் 10 நாட்கள்தான் டேட் என்று சொல்லி அழைத்து சென்று பல நாட்கள் ஷூட் செய்தார்.
அதேபோல் விடுதலை 2வில்கூட மஞ்சு வாரியரை வெற்றி கமிட் செய்தது படத்தின் ஷூட்டிங் 75 சதவீதம் முடிந்த பிறகுதான். மேலும் எனக்கு ஸ்பாட்டில் ஏகப்பட்ட விஷயங்கள் தோன்றும். அதனை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பேன் என்றும் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க ராஜீவ் மேனன் இந்தப் பேட்டியில் வெற்றிமாறனைத்தான் மறைமுகமாக அட்டாக் செய்திருக்கிறாரோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸை பறக்கவிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











