சண்டைக்கோழி - 2... இதிலும் விஷாலுக்கு அப்பா ராஜ்கிரண் தான் !
சென்னை: சண்டைக்கோழி இரண்டாம் பாகத்திலும் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரண் தான் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றி பெற்ற படம் சண்டைக்கோழி. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மினும், அப்பாவாக ராஜ்கிரணும் நடித்திருந்தனர்.

சமீபத்தில் சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படம் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து, சண்டைக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் லிங்குசாமி.
சண்டைக்கோழி இரண்டாம் பாகத்திலும் விஷாலே நாயகனாக நடிப்பார் என்று கூறப்பட்டது. விஷாலும் இத்தகவலை ஏறக்குறைய உறுதி செய்து விட்டார். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இப்படத்திலும், முதல் பாகத்தில் விஷாலின் அப்பாவாக நடித்த ராஜ்கிரணே அப்பாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, முதல் பாகத்தில் வில்லனாக நடித்த லாலே இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறாராம்.
ஆனால், நாயகி வேடத்திற்கு மட்டும் மீராஜாஸ்மினுக்குப் பதில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











