அமரன் டைட்டிலை ஆட்டையைப்போடல.. ராஜ்குமார் பெரியசாமி கொடுத்த விளக்கம்.. எல்லோரும் ஃபாலோ பண்ணணும்!
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படமாக அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் முதன்முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் எனும் ராணுவ அதிகாரியின் பயோபிக் ஆகவே இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். படத்தில் பெரிதாக அவருக்கு வேலை இருக்குமா என்பது சந்தேகம் தான்.

அமரன் டைட்டில்: 1992 ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளியான படம்தான் அமரன். இயக்குநர் கே ராஜேஷ்வர் அந்தப் படத்தை இயக்கி இருந்தார். அமரன் படத்தில் இடம்பெற்ற " வெத்தல போட்ட சோக்குல" பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. அந்தப் படத்தின் டைட்டிலை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 21-வது படத்திற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வைத்திருக்கிறார்.
பழைய பட டைட்டில்: சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனது படங்களுக்கு ஏற்கனவே வெளியான படங்களின் தலைப்புகளை வைத்து வருகிறார் என்கிற விமர்சனம் இந்த அமரன் டைட்டில் பார்த்ததும் கடுமையாக எழுந்தது. சமூக வலைதளத்தில் படத்திற்கு எதிராக கிளம்பியுள்ள ட்ரோல்களைப் பார்த்த ராஜ்குமார் பெரியசாமி அமரன் என்கிற டைட்டிலை ஏன் வைத்தேன் என்பதற்கான விளக்கத்தையும் ஒரிஜினல் டைட்டிலுக்கு சொந்தமான படக்குழுவினருடன் அனுமதி பெற்று வைத்திருக்கிற என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.
அமரன் தான் முதல் வார்த்தை: இந்த படத்திற்கான கதையை எழுதுவதற்கு முன்பாகவே அமரன் என்கிற முதல் வார்த்தையை எழுதி விட்டுத்தான் படத்தின் ஸ்கிரிப்டை ஆரம்பித்தேன். அமரன் என்றால் அழிவில்லாதவன் என அர்த்தம். போர் வீரர்களை அமரர்கள் என அழைப்பார்கள் அதன் காலமாகவே இந்தப் படத்திற்கு அமரன் என டைட்டில் வைத்திருக்கிறேன். இந்த டைட்டிலை எங்களுக்கு கொடுத்த இயக்குநர் கே ராஜேஸ்வருக்கு ரொம்பவே நன்றி.
மேலும், நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அதிகாரப்பூர்வமாக தான் இந்த டைட்டிலை பயன்படுத்துவதாக அதற்கான உரிய அனுமதியை பெற்றிருப்பதாக ராஜ்குமார் பெரியசாமி தற்போது ட்வீட் போட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

முதல் படம் ரங்கூன்: ராஜ்குமார் பெரியசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து தனது முதல் படமான ரங்கூன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகுதான் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல ஆண்டுகள் கமல்ஹாசனுடன் டிராவல் செய்து வந்தார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
எல்லா இயக்குநர்களும்: பழைய பட டைட்டில் கதை முதல் பழைய படங்களின் கதைகளை வரை அப்படியே இன்ஸ்பிரேஷன் என்கிற பெயரில் ஆட்டையை போட்டு வரும் இயக்குநர்கள் அனைவரும் ராஜ்குமார் பெரியசாமியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











