My lord public review: யாருமே சொல்லாத கதை.. சாட்டையடி.. ‘மை லார்ட்‘ படத்தின் பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: 'ஜோக்கர்', 'குக்கூ' போன்ற சமூக பொறுப்புள்ள படங்களை கொடுத்த இயக்குநர் ராஜு முருகன், இயக்கத்தில் சசிக்குமார், சைத்ரா ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் உருவான 'மை லார்ட்' திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் பொதுமக்கள் விமர்சனத்தை பார்க்கலாம்.
'மை லார்ட்' திரைப்படம் அட்டகாசமாக உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து கண்ணே கலங்கிவிட்டது. உயிர்தான் முக்கியம், பணம் முக்கியம் இல்லை என்பதை கருப்பொருளாக வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். அதிகாரத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது எல்லாம் அவர்களின் மனதை பொறுத்துதான் என்பதை சூப்பராக சொல்லியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்துவிட்டு அழுகை தான் வந்தது என்றார்.

தத்ரூபமாக படம்: சசியின் தீவிர ரசிகை நான். இந்த படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக அபுதாபியில் இருந்து வந்து இருக்கிறேன். படத்தை தியேட்டரில் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒவ்வொரு நடிகர்களும், மிகவும் அழகாக அவர்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். சொல்வதற்கு வார்த்தையே இல்லை. ஏனென்றால் சமுதாயத்தில் நடந்து கொண்டே இருக்கும் விஷயத்தை அவ்வளவு தத்ரூபமாக நம் கண் முன் காட்டி இருக்கிறார். அனைவருமே குடும்பத்தோடு இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டிய ஒரு படம். படம் முடியும்போது, மனதிற்குள் ஒரு ஃபீல் இருக்கும், அதை வார்த்தையால் விவரிக்கவே முடியாது. நாங்கள் பீல் பண்ணதை தியேட்டரில் படம் பார்த்து நீங்களும் பீல் பண்ணுங்க என்றார்.
கருத்துள்ள படம்: மற்றொருவர், படம் மிகவும் நன்றாக இருந்தது. இப்போ இருக்கும் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்களை இந்த திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார்கள். பெற்றோர்கள் சொன்னால் குழந்தைகள் கேட்க மாட்டார்கள். இது போன்ற ஒரு சில படங்களின் மூலமாக சொல்லப்படும் சில விஷயங்கள் தான் குழந்தைகளின் மண்டையில் ஏறுகிறது. குழந்தைகள் யோசிக்க கூடிய பல விஷயங்களை படத்தில் சொல்லி இருக்கிறார்கள். படத்தினுடைய கதாநாயகி மிகவும் யதார்த்தமாகவும் அற்புதமாகவும் நடித்து இருக்கிறார் என்றார்.
யாரும் தொடாத கதை: படத்தினுடைய போஸ்டரை பார்க்கும்போது படம் எப்படி இருக்கும், கதை எப்படி இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், படம் ஆரம்பித்து கதை செல்ல செல்ல அனைவரும் சீட்டின் நூனியில் அமர வைத்து விட்டார் இயக்குனர். மருத்துவரான நான் இந்த படத்தை நான் பார்க்கும்போது. அன்றாடும் சந்திக்கும் பல பிரச்சனைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள். படம் முடிந்த பிறகும் யாரும் இருக்கையை விட்டு எழுந்து செல்ல முடியாத அளவிற்கு படம் மிகவும் அருமையாக இருந்தது. மனித நேயம் என்ன என்பதை இந்த படம் சொல்லி இருக்கிறது. சாதாரண குடும்பத்தில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை மேலோட்டமாக சொல்லாமல் அழுத்தமாக யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் மூலம் சொல்லி இருக்கிறார். இப்படி ஒரு கதையை எடுத்த இயக்குநருக்கு அதில் நடித்த சசிகுமாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











