நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் போதைப்பொருள் வழக்கில் கைது!
ஹைதராபாத்: பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங், போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கிய போது, அமன்பிரீத் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017ம் ஆண்டு தெலுங்குத் திரையுலகில் போதைப் பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், இயக்குநர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ராணா, நவ்தீப் ரவிதேஜா, ரகுல் ப்ரீத் சிங் உட்பட 12 பிரபலங்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விவகாரத்தில், ஹவாலா பணம் கைமாறியிருப்பதும் உறுதியானது. பூரி ஜெகன்நாத், சார்மி ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்: இதையடுத்து 2021ம் ஆண்டு போதைப் பொருள், பண மோசடி வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு ரகுல் ப்ரீத் சிங் மணிக்கணக்கில் பதிலளித்தார். மேலும், சந்தேகத்திற்கிடமான முறையில் பணப்பறிமாற்றம் இருந்ததால், வங்கி அறிக்கைகளை வழங்குமாறு அமலாக்கத்துறை ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேட்டிருந்தது.

போதை பொருள் வழக்கில் கைது: இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் ராஜேந்திர நகர் போலீஸாரின் கூட்டு நடவடிக்கைக்குப் பிறகு போதைப்பொருள் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். நான்கு நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கிய போது, அமன்பிரீத் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அமன்பிரீத் சிங் கைது செய்யப்படுவதற்கு முன், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் கோகோயின் போதைப்பொருளை அவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த போதை பொருளை அமன்பிரீத்தை வாங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காதல் திருமணம்: நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், கடந்த வாரம் தியேட்டரில் வெளியான இந்தியன் 2 படத்திலும் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். இவர் தனது நீண்ட நாள் காதலர் ஜாக்கி பக்னாணியை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் ஆடம்பர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











