ரூ350 கோடி பட்ஜெட்.. தப்பிக்குமா ராம் சரணின் பெத்தி? வசூல் சாதனைக்கு நடுவே வெடித்த சர்ச்சை!
சென்னை: நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான 'பெட்டி' (Peddi) திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் வசூலில் அதிரடி காட்டியது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.51 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்த படம், இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.150 கோடியை தாண்டியது.
பெத்தி: ஆனால் மூன்றாவது நாளில் வசூல் சற்று குறைந்துள்ளது. Sacnilk வெளியிட்ட தகவலின்படி, படம் மூன்றாவது நாளில் இந்தியாவில் ரூ.28.85 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மட்டும் படத்தின் மொத்த வசூல் ரூ.125.25 கோடியாக உயர்ந்துள்ளது. வசூல் வேகம் குறைந்திருந்தாலும், உலகளவில் 'பெத்தி' திரைப்படம் இதுவரை ரூ.191.07 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் விமர்சனம்: படம் வசூலில் சாதனை படைத்தாலும், மற்றொரு பக்கம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. படத்தில் 'அச்சியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி கபூரின் சில காட்சிகளும், வசனங்களும் பெண்களைக் கொச்சைப்படுத்துவது போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இயக்குனர் புச்சி பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களின் விமர்சனங்களையும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறோம். திரையரங்கம் என்பது ரசிகர்களோடு கொண்டுள்ள பிணைப்பால் மட்டுமே வளர்கிறது. எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகளைப் படத்திலிருந்து நீக்க அல்லது மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் நாளில் வசூல் குறைவு: ராம் சரண் நடிப்பில் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு வெளியான மூன்றாவது படம் 'பெத்தி'. 'ஆர்ஆர்ஆர்' உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதன்பிறகு வெளியான 'ஆச்சார்யா' மற்றும் 'கேம் சேஞ்சர்' படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படம், வரும் நாட்களிலும் வசூலை தக்க வைத்துக்கொண்டால் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தில் இருந்து தப்பித்துவிடும். இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால், நிச்சயமாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications