இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் - உபாசனா... அடடே அதை கவனிங்க!
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினர் தங்களது 14-வது திருமண நாளை குடும்பத்துடன் மிக விசேஷமாகக் கொண்டாடியுள்ளனர். திருமண வாழ்க்கையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த ஜோடி, தங்களது மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிளின்காரா என்ற மகள் பிறந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருந்தனர்.

வைரலாகும் குட்டி கைகளின் புகைப்படம்: இந்நிலையில், தங்களது 14-வது திருமண நாளை முன்னிட்டு முதன்முறையாக தங்களின் மூன்று குழந்தைகளின் கைகள் மட்டுமே அடங்கிய க்யூட்டான புகைப்படம் ஒன்றை உபாசனா பகிர்ந்துள்ளார். இதில் கடந்த ஜனவரி மாதம் பிறந்த இரட்டை குழந்தைகளான சிவராம் மற்றும் அன்வீரா தேவி ஆகியோரின் குட்டி கைகளுடன், மூத்த மகள் கிளின்காராவின் கையும் இணைந்துள்ளது.
குழந்தைகளின் முகங்களைக் காட்டாமல், கைகளை மட்டுமே காட்டி இந்த எளிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள தம்பதியினர், அதனுடன் "இதயம் நிறைந்துள்ளது" என்று கேப்ஷன் இட்டுள்ளார். இப்பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகின்றனர். ஒரு ரசிகர், "சிறந்த திருமண நாள் புகைப்படம்" என்று எழுத, மற்றொரு ரசிகர், "இரட்டிப்பு மகிழ்ச்சி, இரட்டிப்பு மந்திரம்" என்று தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகிறார்கள்.

நெகிழ்ச்சி அடைந்த ராம் சரண் - உபாசனா: இரட்டை குழந்தைகளின் வருகைக்குப் பிறகு, இந்தத் தம்பதியினர் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து ராம் சரண் கூறுகையில், "மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோராகும் பாக்கியம் பெற்றது எனக்கு மிகுந்த நன்றியுணர்வை அளிக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் எங்களுடன் உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் உபாசனாவும், "நாங்கள் கற்பனை செய்தபடியே மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருப்பதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். எங்களது குழந்தைகள் வலிமையாகவும், அதே நேரத்தில் பிறருக்குக் கொடுப்பதில்தான் உண்மையான வாழ்வின் மரபு அடங்கியுள்ளது என்பதை உணர்ந்தும் வளர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்" என்று குறிப்பிட்டுள்ளார். உபாசனா தற்போது அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸில் ராம் சரண்: ராம் சரண் கடைசியாக நடித்து வெளியன படமான பெத்தி, ஸ்போர்ட்ஸ் டிராமா விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைக் குவித்து சாதனை படைத்தது. தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் ரகசியமாக வைத்திருக்கும் இந்தத் தம்பதி, தங்களின் திருமண நாளில் ஒட்டுமொத்த குடும்பத்தின் முக்கிய மைல்கல்லை ஒரே பிரேமில் கொண்டு வந்து ரசிகர்களுக்கு இரட்டிப்புச் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications