ராம் சரணின் கேம் சேஞ்சர் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?.. கடைசி 5 படங்களின் வசூல் எவ்வளவு?
சென்னை: பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது அந்த படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவரும், நல்லா இருக்குமா? இல்லையா? என்றெல்லாம் பார்ப்பதை கடந்து ரசிகர்களே தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் போல பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகளை தேடத் தொடங்கி விட்டனர். மேலும், அதை வைத்து ரசிகர்கள் சண்டைகளையும் அதிகளவில் போட்டு வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, சமுத்திரகனி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் நாளை மறுநாள் தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் அந்த படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா/ என்கிற பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அனைத்தையும் சரிகட்டி படம் தமிழ்நாட்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்களிலும் படத்தை பார்க்க வாங்க, டிக்கெட் புக்கிங் ஓபன் செய்துவிட்டோம் என புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் வெப்சைட்டுகள் கூவிக் கூவி அழைத்தாலும் தமிழ்நாட்டு ரசிகர்கள் இந்தியன் 2 படத்துக்குப் பிறகு ஷங்கர் படத்தை பார்க்க ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது. ஆனால், மற்ற இடங்களில் கேம் சேஞ்சர் படத்துக்கு எந்தளவுக்கு மவுசு உள்ளது. முதல் நாள் வசூல் எப்படி இருக்கும், இதற்கு முன் ராம்சரண் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்களின் வசூல் கணக்கு குறித்த தகவல்களை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

பொங்கல் போட்டி: ஷங்கர் இயக்கத்தில் சுமார் 400 - 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. பாலகிருஷ்ணா நடித்துள்ள டாக்கு மகராஜ் மற்றும் வெங்கடேஷ் நடித்துள்ள சங்கராந்தி வஸ்துன்னாம் உள்ளிட்ட படங்கள் தெலுங்கில் போட்டியாக வெளியாகின்றன. தமிழில் வணங்கான், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் போட்டியாக வெளியாகின்றன.

கேம் சேஞ்சர் வசூல் கணிப்பு: ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக இருந்தும் இந்தியில் முதல் நாள் வசூல் 5 கோடி தான் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 1 கோடி வருவதே கஷ்டம் தான் என்கின்றனர். ஆந்திராவில் மட்டுமே 70 முதல் 80 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் இந்த படம் முதல் நாளில் 90 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தால் மட்டுமே பெரிய வசூல் வேட்டையை நடத்தி லாபத்தை ஈட்டும் என்கின்றனர்.

முந்தைய 5 படங்களின் வசூல் கணக்கு: ராம் சரண் கடைசியாக தனது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படம் ஒட்டுமொத்தமாக 73.5 கோடி மட்டுமே வசூல் ஈட்டியது. ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர். அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1300 கோடி வரை வசூல் ஈட்டியது. போயாபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் சரண் நடித்த வினய விதய ராமா படமும் 63 கோடி வசூல் செய்து தோல்வியடைந்தது.
சோலோ ஹிட்: ரங்கஸ்தலம் திரைப்படம் ராம் சரணுக்கு சோலோ ஹிட் கொடுத்தது. சுகுமார் இயக்கத்தில் சமந்தாவுடன் ராம் சரண் நடித்த அந்த படம் 216 கோடி வசூல் ஈட்டியது. தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் படமான துருவா திரைப்படம் 150 கோடி வசூலை வாரித் தந்தது. கேம் சேஞ்சர் மூலமாக சோலோவாக 500 கோடி வசூலை ராம் சரண் கடப்பாரா என்பது சந்தேகம் தான் என்கின்றனர். ஷங்கரின் மேஜிக் வொர்க்கவுட் ஆனால், மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications











