ஜான்வி கபூர் பக்கத்துல ஜம்முன்னு ராம்சரண்.. ஏ,ஆர். ரஹ்மான் இசையில் தெறிக்கப்போகும் ஆர்சி 16!
ஹைதராபாத்: சென்னையில் இன்று இளையராஜாவின் பயோபிக் படத்தின் அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை விட சிறப்பாக ஹைதராபாத்தில் ராம்சரணின் 16வது படத்துக்கான பூஜை போடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து ஆஸ்கர் மேடை வரை அலற விட்டார் ராம்சரண். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக கேம் சேஞ்சர் படம் உருவாகி வருகிறது. அந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக தனது 16வது படத்தை ஆரம்பித்துள்ளார் ராம்சரண்.

ராம்சரண் 16வது படம்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் சினிமாவில் தந்தையை மிஞ்சிய தனையனாக மாறி உள்ளார். ராம்சரண் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களுமே பெரிய படங்களாக உருவாகி வருகின்றன. தனி ஒருவன் தெலுங்கு வெர்ஷன் துருவா, ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா, ஆர்ஆர்ஆர் என அத்தனை படங்களும் மெகா பிளாக்பஸ்டர் படங்கள் தான். இந்நிலையில், அடுத்ததாக தனது 16வது படத்தில் ராம்சரண் நடிக்க உள்ள நிலையில், அந்த படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ரங்கஸ்தலம் இயக்குநர்: ராம்சரண், சமந்தா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்கத்தில் தான் அடுத்து ராம்சரண் நடிக்கவுள்ளார். விஜய்சேதுபதி, க்ரித்தி ஷெட்டி நடித்த உப்பென்னா படத்தை அடுத்து இந்த படத்தை காத்திருந்து இயக்குகிறார் புச்சி பாபு சனா.

ஜான்வி கபூர் ஜோடி: ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தெலுங்கில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அடுத்து ராம்சரணுக்கு ஜோடியாக தெலுங்கிலேயே நடிக்கிறார். ராம்சரண் 16வது படத்தில் ஜான்வி கபூர் தான் ஹீரோயின். இன்று நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியில் செம அழகாக அவர் கலந்து கொண்ட காட்சிகளும் அவர் அருகே ராம்சரண் சும்மா ஜம்முன்னு இருக்கும் போட்டோக்களும் டிரெண்டாகி வருகின்றன.

ஏ.ஆர். ரஹ்மான் இசை: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தில் தமன் இசையமைத்த நிலையில், தற்போது ஏ.ஆர். ரஹ்மானை இந்த படத்துக்கு இசையமைக்க புக் செய்திருக்கிறார். ஆடுஜீவிதம் மலையாள படம் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்து டோலிவுட் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரும் எளிமையாக எப்போதும் போல புன்னகையுடன் பங்கேற்ற காட்சிகளும் தீயாக பரவி வருகின்றன. இந்த படத்திற்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகளை கவனித்துக் கொள்கிறார்.

ஷங்கர் படம்: ராம்சரண், கியாரா அத்வானி, சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள கேம் சேஞ்சர் படம் பல ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டு வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் 30 கோடி ரூபாய் செலவில் கேம் சேஞ்சர் படத்துக்கு ஒரு பாடலை ஷங்கர் உருவாக்கப் போவதாக கூறப்பட்டது. மேலும், இந்த படத்தில் ஷங்கருக்கு சம்பளம் இல்லாமல் ஷேர் கொடுக்கப்படப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தியன் 2ம் பாகம், 3ம் பாகம் மற்றும் கேம் சேஞ்சர் என ஹாட்ரிக் அடிக்க ஷங்கர் காத்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











