Pathaan: ஷாருக்கானின் ‘பதான்’ தான் அதற்கு முடிவு கட்டியது... கொளுத்திப் போட்ட ராம்கோபால் வர்மா
மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.
பதான் படத்தைத் தொடர்ந்து ஜவானும் ஷாருக்கானுக்கு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஷாருக்கானின் பதான் தான் கோலிவுட், டோலிவுட் படங்களின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியதாக ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
ஷாருக்கானின் பதான் தான் அதற்கெல்லாம் காரணம்: இந்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாய்காட் பிரச்சினை தலை விரித்தாடியது. இதனால் பிரம்மாண்டமாக உருவான பல படங்களும் அடிமேல் அடி வாங்கியது. அமீர்கானின் லால் சிங் சந்தா, அக்ஷய் குமார், சல்மான் கான் என முன்னணி ஹீரோக்களின் படங்களும் பாய்காட் பிரச்சினையால் பந்தாடப்பட்டன.
அதேநேரம் தெலுங்கில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா, ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர், தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம், கன்னடத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் உட்பட பல தென்னிந்திய படங்கள் இந்தியில் சூப்பர் ஹிட் அடித்தன. பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் இந்திப் படங்களே தடுமாறிய நிலையில், கோலிவுட், டோலிவுட் சினிமாக்கள் சம்பவம் செய்தன.
முக்கியமாக பான் இந்தியா சினிமா என்ற பிராண்டிங், தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாக காரணமாக அமைந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்துக்கும் பாய்காட் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பதான் படத்துக்கு செம்ம பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
இதன் காரணமாக தற்போது ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்துக்கும் அதிக எதிர்பாப்பு காணப்படுகிறது. அட்லீ இயக்கியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளதால், பாலிவுட்டில் இப்போதே ஜவான் ஃபீவர் தொடங்கிவிட்டது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் ராம்கோபால் வர்மா, பாலிவுட்டில் தென்னிந்திய படங்களின் அலையை பதான் தான் தடுத்து நிறுத்தியது என்றுள்ளார்.
அதாவது, "பாலிவுட்டில் இந்தி படங்களே பாய்காட் பிரச்சினையில் சிக்கித் திணறிய போது, ஷாருக்கானின் பதான் தான் சூப்பர் ஹிட் ஆனது. பதான் தான் இந்திப் படங்கள் இனிமேல் வெற்றி பெற முடியாது என மக்கள் மத்தியிலிருந்த மாயையை உடைத்தெறிந்தது. ஒரு படம் வெற்றி பெறுவதற்கு அது சிறப்பாக இருந்தாலே போதுமானது. தெற்கு, வடக்கு எனப் பிரித்துப் பார்ப்பதற்கு அதில் ஒன்றும் இல்லை" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











