படம் கோடி, கோடியாக வசூலித்தும் ஹீரோவுக்கே சம்பளம் கொடுக்கவில்லையா?
ஹைதராபாத்:இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் பிரச்சனை என்று வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ராம் போதினேனி.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் போதினேனி, நபா நடேஷ் உள்ளிட்டோர் நடித்த ஐஸ்மார்ட் ஷங்கர் தெலுங்கு படம் கடந்த 18ம் தேதி வெளியானது. படம் வெளியான 6 நாட்களில் உலக அளவில் ரூ. 56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

பட வசூல் நிலவரம் குறித்து அவ்வப்போது ட்வீட் செய்து கொண்டிருக்கிறார் தயாரிப்பாளரான சார்மி. இந்நிலையில் சம்பளம் தொடர்பாக ராம் போதினேனிக்கும், ஐஸ்மார்ட் ஷங்கர் பட தயாரிப்பாளர்களான சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோருக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகின.
படம் ஹிட்டாகியும் ராம் மற்றும் சில தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று தகவல் வெளியானது. சம்பளம் கொடுக்காததால் தான் ராம் ஐஸ்மார்ட் ஷங்கர் பட விழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்றும், இது தொடர்பாக அவர் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் கூறப்பட்டது.
படம் கோடி, கோடியாக வசூலிக்கும் நிலையில் ஹீரோவுக்கே இன்னும் சம்பளம் கொடுக்கவில்லையா என்று டோலிவுட் ரசிகர்கள் பேசத் துவங்கினர். இந்நிலையில் இது குறித்து ராம் போதினேனி விளக்கம் அளித்துள்ளார்.
சம்பள பிரச்சனை குறித்து ராம் கூறியதாவது,
வழக்கமாக நான் போலி செய்திகளுக்கு பதில் அளிப்பது இல்லை. இந்த விஷயத்தில் விளக்கம் அளிக்கிறேன். எனக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஐஸ்மார்ட் ஷங்கர் படக் கதை தான் நடித்த நான் யார் படக் கதை என்று நடிகர் ஜெய் ஆகாஷ் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











