For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இராமராஜன்... இனி யார்க்கும் அமையாத அருமைகளின் சொந்தக்காரர்!

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  இப்போது வருகின்ற படங்களில் முகமறிந்த நடிகர்களைவிட முகமறியாத நடிகர்கள் நடித்த படங்கள் மிகுதி. விளம்பரப் படத்தில் பார்த்த முகமாய்க் கூட இல்லை, கேட்டால் நான்கு படங்களில் நாயகனாக நடித்திருப்பதாகக் கூறுகிறார்கள். இரண்டாயிரத்துக்கு முந்திய காலத்தில் இந்தக் கலவையின் அளவு மிகச் சரியாகவே இருந்தது என்பது என் கணிப்பு. நன்கறிந்த கலைஞர்களின் படங்களும் அறிமுகக் கலைஞர்களின் படங்களும் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அப்போது வெளியாகும். அறிமுகக் கலைஞர்களோடு வெளியாகும் படங்கள் நன்றாக இருந்துவிட்டால் போதும், எல்லா முன்னோடிகளையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் பிய்த்துக்கொண்டு ஓடும். இதற்கு ஒருதலை ராகத்திலிருந்து தொடங்கி எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

  நம்ம ஊரு நல்ல ஊரு என்று ஒரு படம் வந்தது. வி. அழகப்பன் என்பவர் இயக்கிய படம். இவர் கங்கை அமரனிடம் இணை இயக்குநராக இருந்திருக்கிறார். கோழி கூவுது படத்தின் இயக்கப் பாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் கங்கை அமரன், "அப்படத்தின் காட்சிச் சுடுவுகளைப் பிரித்தமைத்து எடுத்ததில் பெரும்பங்காற்றியவர்கள் படப்பதிவாளர் நிவாஸும் இணை இயக்குநர் அழகப்பனும்தான்," என்று ஒரு நேர்காண்பில் சொன்னார். எளிமையான கதையமைப்புகளோடும் ஊர்ப்புறத் தன்மைகளோடும் அமைந்த அழகப்பனின் படங்கள் அப்போது தொடர்ந்து வெளியாயின. இயக்குநரின் குறுக்கீடு தெரியாதவாறு, குழறுபடியில்லாத வகையில் தெளிவான ஓட்டத்தோடு அவருடைய படங்கள் இருந்தன.

  Ramarajan movies - An analysis

  'நம்ம ஊரு நல்ல ஊரு' கல்லூரிக்குப் போகின்ற உள்ளூர் இளையவர்களைப் பற்றிய படம். நாயகன் இராமராஜன் என்னும் புதியவர். படத்தின் ஈர்ப்புக்குக் காரணமானவர் நாயகி இரேகா. கடலோரக் கவிதைகள் வெளியாகி இரேகாவின் மீதான ஈர்மானம் (அபிமானம்) பட்டிதொட்டியெங்கும் பரவியிருந்த நேரம். பள்ளிக்குச் செல்லும் நாயகன் அவனுடைய நண்பர்கள். அதே பேருந்தில் கல்லூரிக்கு வரும் முறைப்பெண்தான் நாயகி. நாயகனின் நண்பர்களோடு அலுப்பில்லாத நகைச்சுவைக் காட்சிகள். நாயகனின் குடும்பத்துக்கும் நாயகி குடும்பத்துக்கும் முற்பகை. அவர்களுடைய காதல் அந்தப் பகையால் துவள்வதும் பிறகு கூடுவதும்தான் கதை. இந்தக் கதைத்தளம் அண்மையில் வெளியாகி நன்கு ஓடிய ஒரு படத்தை நினைவுபடுத்தினால் அதற்கு அழகப்பன்தான் பொறுப்பு.

  நம்ம ஊரு நல்ல ஊரு எங்கள் ஊரில் நாற்பது நாள்களைக் கடந்து ஓடியது. அதன் நாற்பதாம் நாள் சுவரொட்டியில்தான் இராமராஜனின் முகத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெளியாயின. சில படங்களுக்குப் பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படம் வந்தது. அப்போதைய படங்களுக்குக் கட்டியம் கூறும் பொறுப்பு இளையராஜாவின் இசைக்கு நேர்ந்துவிடப்பட்டது. யார் வேண்டுமானாலும் நடித்திருப்பார்கள், இயக்கியிருப்பார்கள், அப்படத்தில் தவறாமல் இளையராஜாவின் இசை இருக்கும். புதியவர்கள், அறிமுகங்கள் என்ற தயக்கங்களை எல்லாம் அப்படத்தில் இடம்பெறும் இளையராஜாவின் இசை தகர்த்தெறிந்துவிடும். தேநீர்க் கடைகளிலும் பேருந்துகளிலும் ஒலிபெருக்கிகளிலும் தொடர்ந்தொலிக்கும் அவரின் புதிய படப்பாடல் கூட்டத்தை அரங்கிற்கு அழைத்து வரும்.

  எங்க ஊரு பாட்டுக்காரனின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. அழகான சிற்றூர், பாடகனான மேய்ப்பன், வயலும் ஆவினங்களும் வாழ்வுடைமைகள், அப்பாடல் வல்லானுக்கு வாழ்வில் அமையும் இருதாரங்கள் - இதுதான் கதை. தமிழ்த் திரைப்படத்தின் படத்தொகுப்பு வல்லமைக்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறுங்கள் என்றால் நான் இந்தப் படத்தின் முதற்பாதியைக் கூறுவேன். இலெனினின் படத்தொகுப்பு மேதைமைக்கு இப்படம் ஒருசோற்றுப் பதம். இயல்பாகத் தொடங்கும் கதையில் இசையும் காணெழிற் சுடுவுகளும் காட்சித் தொடர்களுமாய் நகரும் அப்படம் காண்போரைச் சிலிர்ப்பூட்டும்படி உள்ளீர்த்து மகிழ்த்தும். மதுரை மரிக்கொழுந்து வாசம் பாடல் தமிழ்த்திரை தந்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று.

  எல்லாம் கூடி அமைந்தது. படத்தின் நாயகன் இராமராஜனுக்கு நட்சத்திர மதிப்பு ஏற்பட்டது. முதல் ஐந்து நாயகர்களில் ஒருவராக குமுதம் அரசு பதில்களில் தட்டுப்பட்டார். திரைப்படத் துணுக்குகளில் தொடர்ந்து இடம்பெற்றார். ஆண்டுக்கு ஏழெட்டுப் படங்கள் வெளியாகின. கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே வெற்றி பெற்றன என்று சொல்ல வேண்டும். ஊர்ப்புறக் கொட்டகைகளில் இராமராஜன் படங்களுக்குக் கூட்டம் குவிந்தது. படம் முடிந்து வெளியேறும் கூட்டத்தினரால் திரையரங்கத் தெருக்கள் தேர்க்கூட்டத்தால் நெரிவதைப்போல் ஆயின. அந்தக் கூட்டத்தில் ஒருவராக நசுங்கியவர்களுக்குத்தான் இதன் பொருள் விளங்கும்.

  கிராமத்து மின்னல், செண்பகமே செண்பகமே, இராசாவே உன்னை நம்பி போன்ற படங்கள் நூறு நாள்களைத் தொட்டன. ஒரு படத்தின் பாடல்களைக் கேட்டுக் களைப்பதற்குள் அடுத்த படத்தின் பாடல்கள் பரவத் தொடங்கும். இத்தகைய போக்குக்கு முத்தாய்ப்பாக ஒரு படம் வந்தது. திரையுலக வெற்றி வரலாற்றைப் புரட்டிப் போட்ட கரகாட்டக்காரன். இராமராஜனுக்கென்று ஒரு பெண்கள் திரள் உருவாகியிருந்தபோது அப்படம் வெளியானது. வழக்கம்போலவே இளையராஜாவின் பாடல்கள் திகட்டாத தெள்ளமுதாக இருந்துவிட, எந்தக் கேள்வியும் இல்லாமல் படத்தின் முதற்காட்சியிலிருந்தே அரங்குகள் நிரம்பத் தொடங்கின. அப்போது நான் பள்ளிச் சிறுவன், அந்தப் படத்தை நான் முதல் நாளிலேயே பார்த்தேன். மக்களில் ஒரு திரளினர் ஒவ்வொரு காட்சிக்கும் சிரிப்பதும் கைத்தட்டுவதும் கத்துவதுமாகவே இருந்தனர். அப்படத்தை ஓராண்டு கழித்து உள்ளூர்க் கொட்டகையிலும் பார்த்தேன். கூட்டத்தினரின் எதிர்வினை முதற்காட்சிக்கு இருந்ததைப்போலவே தொடர்ந்தது. திரைப்பட வரலாற்றில் கரகாட்டக்காரன் நிகழ்த்தியது ஒரு மாயவினை என்றால் மிகையில்லை.

  கரகாட்டக்காரனை அடுத்து வந்த படங்கள் நன்றாகவே ஓடின. இராமராஜன் எடுத்த அரசியல் நிலைப்பாடுதான் அவருடைய சந்தை மதிப்பு சரிவதற்குக் காரணமாயிற்று. அவர் சார்ந்திருந்த கட்சி உடைவுகளில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் கைவிட்டன. புதுப்பாட்டு என்ற படத்திற்குப் பிறகு அவருடைய படங்கள் வரிசையாகத் தோற்றன. ஊரெல்லாம் உன் பாட்டு, வில்லுப்பாட்டுக்காரன் போன்ற படங்கள் அதே உள்ளடக்கங்களோடு இருந்தபோதும் மக்களைக் கவரவில்லை. இராமராஜன் களிப்பூட்டத் தவறினார். தமிழ்த் திரைப்படப்போக்கு அகல்திரைப் படங்கள், பெரும்பொருட்செலவுகள் என்று மாறியபோது இராமராஜன் சந்தை மதிப்பிழந்தார். தம்மை எடுத்து நிறுத்திக்கொள்வதற்காக அவரே இயக்கி நடித்த படங்களும் கைவிட்டன. காலமும் மாறிவிட்டது.

  இராமராஜன் தம் இயக்குநர்களிடம் முழுமையாக ஒப்படைத்துக்கொண்டு நடித்த நட்சத்திரம். தமிழகத்தின் உயிர்நாடியான ஊர்ப்புறங்களின் பண்பாட்டுக் கூறுகளை அவர் படங்கள் காட்டின. பண்ணையாளாக, பாட்டுக்காரனாக, காவல்காரனாக, கரகாட்டக்காரனாக, பொறுப்பானவனாக, நடுநிலையாளனாக, காதலனாக, கணவனாக அவர் நடித்த படங்கள் பார்ப்போர் மனத்தில் மென்னுணர்ச்சிகளைத் தூண்டின. அவர் படங்களின் பாடல்களும் நகைச்சுவைக் காட்சிகளும் கறுப்பு வெள்ளைக் காலத்துப் படங்களின் பாடல்களுக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கும் அருகில் வரும் தரத்தவை. எப்படிப் பார்த்தாலும் இராமராஜன் நினைவுகொள்ளத்தக்க கலைஞர். இனி யார்க்கும் அமையாத பல அருமைகளின் சொந்தக்காரர்.

  English summary
  An analysis on actor Ramarajan and his movies
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X