500 கோடி கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்.. மக்கள் நாயகன்னு சும்மாவா சொன்னாங்க.. ராமராஜன் பளிச்!
சென்னை: சிகரெட், சரக்கு, கெட்ட வார்த்தை இதெல்லாம் இருந்தால் தான் முன்னணி நடிகர்கள் படம் என்கிற அளவுக்கு இந்த கால சினிமா மாறியுள்ள நிலையில், 500 கோடி கொடுத்தாலும் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என இப்போதும் சொல்கிறார் மக்கள் நாயகன் ராமராஜன்.
ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கும் ஆஸ்த்தான இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சாமானியன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.எஸ். ரவிக்குமார் ராமராஜன் படம் ரிலீஸ் ஆனால், ரஜினிகாந்தே பயப்படுவார் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நாயகன்: மக்கள் திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜன் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களையும் பாடல்களையும் இன்றளவும் ரசிகர்கள் ரசித்து பார்த்தும் அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களை கேட்டும் வருகின்றனர்.
லிப்ஸ்டிக்கும் ரோஸ் பவுடரும்: கங்கை அமரன் இயக்கத்தில் கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் கரகத்தை தலையில் வைத்து நடனமாடியது எல்லாம் ரசிகர்களை இன்னமும் கவர்ந்து வருகிறது. ராமராஜன் என்றாலே சிலுக்கு சட்டை, உதட்டில் லிப்ஸ்டிக், கன்னத்தில் ரோஸ் பவுடருடன் தான் இருப்பார் என்றே ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் வெள்ளை சட்டை அணிந்துக் கொண்டு ராமராஜன் சென்றிருந்தாராம். அப்போது ஒரு அம்மா எங்கே ராமராஜன் என அவரிடமே கேட்க, நான்தாம்மா ராமராஜன் என சொன்னதும், என்ன இந்த சட்டை போட்டுக்கிட்டு வந்திருக்க என ராமராஜனிடமே அந்தம்மா கேட்டதாக புதிய பேட்டியில் ராமராஜன் கூறியுள்ளார்.
500 கோடி கொடுத்தாலும்: நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றும் குணசித்ர கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என இப்பவும் இருக்கீங்களா என கேட்ட கேள்விக்கு ஹீரோயிசமான கதை என்றால் நடிப்பேன் ஹீரோ என்றால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நல்ல விஷயத்தை கற்றுத் தர வேண்டும் எல்கேஜி படத்தில் நடிக்க ஆர்ஜே பாலாஜி அழைத்தார். பார்ட்டி படத்தில் நடிக்க வெங்கட் பிரபு கூப்பிட்டார். ஆனால், நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டேன். 500 கோடி கொடுத்தாலும் சிகரெட், சரக்கடிக்கும் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன். பார்ட்டி படத்தின் போஸ்டரை பார்த்தால் பாட்டிலுடன் இருந்தது நல்லவேளை ஒத்துக்கல என நினைத்து சந்தோஷப்பட்டேன் என ராமராஜன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











