Ramarajan - கரகாட்டக்காரன் எஃபெக்ட்.. ராமராஜனுக்கு பெயரை மாற்றிய பேரன்
சென்னை: Ramarajan (ராமராஜன்) கரகாட்டக்காரன் படத்தின் செண்பகமே செண்பகமே பாடலை பார்த்ததிலிருந்து தனது பேரன் தனக்கு பெயரை மாற்றிவிட்டதாக நடிகர் ராமராஜன் தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக கோலோச்சியிருந்த காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர் ராமராஜன். உயரம் கம்மியான உருவம், சினிமாவுக்குரிய இலக்கணம் இல்லாத உடல்வாகு என முத்திரை குத்தப்பட்டாலும் தனது திறமையால் முன்னேறியவர் ராமராஜன்.

கரகாட்டக்காரன்: ராமராஜனின் திரை வாழ்க்கையையே புரட்டிப்போட்ட படம் என்றால் கரகாட்டக்காரன். தில்லானா மோகனாம்பாள் படத்தின் கிராமத்து வெர்ஷனாக உருவாகியிருந்த அந்தப் படத்தை கங்கை அமரன் இயக்கியிருந்தார். 1989ஆம் ஆண்டு வெளியான அப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். பக்கா கிராமத்து வாசனையோடு படம் உருவாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அப்படம் ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடியது.அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை ஊர் திருவிழாக்களிலும் பலரது செல்ஃபோன்களிலும் ஒலித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, கமலுக்கு இணையாக: கரகாட்டக்காரன் வெற்றிக்கு பிறகு அவரது கிராஃப் உச்சத்துக்கு சென்றது. ரஜினி,கமலுக்கு இணையாக அவருக்கும் ரசிகர்கள் சேர்ந்தனர். கரகாட்டக்காரனுக்கு பின்பு அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. இந்தச் சூழலில் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. நிலைமை இப்படி இருக்க சினிமாவிலிருந்து ஒதுங்கிய ராமராஜன் அரசியலில் கவனத்தை திருப்பினார். ஆனால் அதிலிருந்தும் ஒருகட்டத்துக்கு மேல் ஒதுங்கினார்.
சாமானியன்: தமிழ் சினிமாவில் சோலோ ஹீரோவாக மட்டுமே அதிக படங்கள் நடித்தவர் என்ற பெருமை ராமராஜனுக்கு மட்டும்தான் உண்டு. அவர் பல வருடங்களுக்கு பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பல வருடங்கள் திரையில் தனது முகத்தை காண்பிக்காமல் இருந்த ராமராஜன் தற்போது சாமானியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராகேஷ் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தையும் ஈர்த்துள்ளது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
ராமராஜன் பேட்டி: இதற்கிடையே சமீபத்தில் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டானது. வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருந்த அந்த வீடியோவில் ஹோட்டல் ஒன்றில் தமிழ் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த வரிசையில் கரகாட்டக்காரன் போஸ்டரும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் அருண் ஸ்காட்லாந்தில் ஆடிட்டராக இருக்கிறார். அவர் ஒருமுறை ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்றபோது அந்தப் போஸ்டரை பார்த்திருக்கிறார்.
Cow தாத்தா: உடனே அவர் ஆச்சரியப்பட்டு ஹோட்டல் ஓனரிடம் பேசியிருக்கிறார். அப்போதுதான் தெரிந்திருக்கிறது அந்த ஓனர் மதுரை மேலூர் சொக்கம்பட்டி என்று. நாங்களும் சொக்கம்பட்டிதான். அதனையடுத்து அவரிடம் பேசிவிட்டு அங்கே எடுத்த வீடியோவை எனக்கு அனுப்பினார். எனது பேரன் ஒருமுறை செண்பகமே செண்பகமே பாடலை பார்த்துவிட்டார். அதிலிருந்து என்னை Cow தாத்தா என்றுதான் கூப்பிடுகிறான்.
கடல் கடந்தும் பேசுறாங்க: நான் அதிக படஙக்ள் நடித்ததில்லை. 45ஆவது படத்தையே இப்போதுதான் பண்ணுகிறேன். ஆனாலும் நான் நடிச்ச படம் பற்றி கடல் கடந்தும் பேசுறாங்க, கொண்டாடுறாங்க என்று நினைக்கும்போது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











