ராமராஜனின் சாமானியன் படம் எப்படி இருக்கு.. பிரபலங்கள் சொல்வது என்ன?
சென்னை: ராமராஜன் சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் மக்கள் அவரை மறக்காமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இப்படியான நிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், ப்ரீமியர் ஷோ இன்று சினிமா பிரபலங்களுக்காக திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
ராமராஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தில், 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருவதால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சாமானியன் படத்திற்காக இளையராஜா இசையமைத்துள்ளார்.

நடிகர் ராமராஜன்: கலர் கலரா சண்டை, உதட்டிற்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு தனக்கு என்று தனி ஸ்டைலை நடிகர் ராமராஜன் வைத்து இருந்தார். சிக்ஸ் பேக் உடல்வாகு இல்லை என்றாலும், அந்த உடலையும் அப்பட்டமாக காட்டிக்கொண்டு, அரை டவுசருடன் படம் முழுக்க வலம்வர இவரால் மட்டும் தான். அவரின் எதார்த்தமான நடிப்பு மக்களுக்கு பிடித்துப்போக, இவர் நடித்த படங்கள் 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடியது. நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன்.
கரகாட்டக்காரன்: கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ராமராஜன், கனகா நடித்த கரகாட்டகாரன் படம் ஒரு வருடத்திற்கு மேல் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. அந்த படத்தில் வரும் மாங்குயிலே ... பூங்குயிலே பாடல் இன்றை தலைமுறையினருக்கும் பிடித்தமான பாடலாக உள்ளது. அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு வந்த அவர் திடீரென சினிமாவில் காணாமல் போனார்.
சாமானியன்: பல ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், கே.எஸ். ரவிக்குமார் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்தி திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த டிரைலரில் நடிகர் ராமராஜன், தன்னுடைய பாணியில் மக்களை கவரும் வகையில் நடிப்பை பிரமாதமாக கொடுத்திருக்கிறார்.
மனோஜ் பாரதி ராஜா: ரொம்ப நாள் கழித்து ராமராஜன் நடித்த சாமானியன் படம் பார்க்கிறேன், அந்த படத்தில் அப்படியே அந்த பழைய ராமராஜனை பார்த்தது போல இருக்கு. படம் ரொம்ப நல்ல இருக்கு, இந்த படம் கண்டிப்பா சமுதாயத்திற்கு முக்கியமாக கருத்தை சொல்லும் படமாக இருக்கும். இதில் நக்ஷா, ராமராஜனின் மகளாக நடித்து இருக்கிறார். உண்மையில் அந்த பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவர் நன்றாக நடித்து இருக்கிறார். அவர் மட்டுமில்லாமல் இந்த படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.
லியோனி: ராமராஜன் படம் என்றாலே அதில் கிராமிய காதல் இருக்கும், அதே போல இளையராஜாவின் இசை இருக்கும். ஆனால், இந்த படத்தில், ராமராஜன் இந்த படத்தின் தலைப்புக்கு தகுந்தபடி ஒரு சாமானியனாக நடித்து இருக்கிறார். இந்த உலகத்தில் சாதாரண சாமானிய மக்களை யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த உலகத்தை ஆட்சி செய்து கொண்டு இருப்பதே அவர்கள் தான். அதை, அழகாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய ஒரு சமுதாய சிந்தனையை ஏற்படுத்தும் என்றார். இந்த படத்தில் ஒரு புதிய ராமராஜன் சாரை ஒரு புது கோணத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











