இது தெரியாம போச்சே.. தொடர்ச்சியாக ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் பார்த்து கின்னஸ் படைத்த இளைஞர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒருவாட்டி பார்க்கலாம் ப்ரோ என சில படங்களுக்கு ரசிகர்கள் விமர்சனம் சொல்வது வழக்கம்.
சில சூப்பர் ஹிட் படங்களை 5 முதல் 10 முறைக்கு மேல் தியேட்டருக்கு சென்று சில தீவிரமான ரசிகர்கள் பார்ப்பார்கள். வளர்ந்து வரும் ஓடிடி காலத்தில் ஒரு முறை கூட தியேட்டருக்கு போகாமல் புதிய படங்களை ஒரு மாதத்திற்குள் வீட்டிலேயே பலர் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால், ஃப்ளோரிடாவை சேர்ந்த ராமிரோ அலானிஸ் அதிக முறை ஸ்பைடர்மேன் நோவே ஹோம் திரைப்படத்தை தியேட்டரில் பார்த்து கின்னஸ் சாதனையே படைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்
இயக்குநர் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வெளியான படம் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம். டாம் ஹாலண்ட், ஜெண்டாயா நடிப்பில் உருவான இந்த படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் டாபி மார்குயிர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் உள்ளிட்ட பழைய ஸ்பைடர்மேன்களும் மல்டிவெர்ஸ் கான்செப்ட் மூலம் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

292 முறை
தீவிர மார்வெல் ரசிகரான ஃப்ளோரிடாவை சேர்ந்த ராமிரோ அலானிஸ் (Ramiro Alanis) ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்தை தொடர்ந்து தியேட்டரில் 292 முறை பார்த்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். டிசம்பர் 16, 2021 முதல் மார்ச் 15, 2022 வரை 720 மணி நேரங்கள் (30 நாட்கள்) செலவு செய்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

கின்னஸ் சாதனை
ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் வெளியான வாரத்தில் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 5 காட்சிகள் என 7 நாட்கள் தொடர்ந்து தியேட்டரிலேயே குடிகொண்டு படத்தை பார்த்து இருக்கிறார் மனுஷன். இதுவரை எந்த வொரு ரசிகரும் செய்யாத அளவுக்கு 292 முறை படம் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
இதற்கு முன்னதாக மார்வெல் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தை இதே அலானிஸ் 191 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் போஹிமன் ராப்ஸோடி எனும் படத்தை 108 முறை கடந்த 2019ல் பார்த்து கின்னஸ் சாதனை செய்திருந்தார்.
Recommended Video

என்ன கண்டிஷன்
கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டுமென்றால் படத்தை ஆரம்பம் முதல் எண்ட் கிரெடிட்ஸ் முடியும் வரை பார்க்க வேண்டும். மேலும், படம் பார்க்கும் போது செல்போன் நோண்டவோ, தூங்கவோ, படம் ஓடிக் கொண்டிருக்கும் போது பாத்ரூமிற்கோ செல்லக் கூடாது. பல நாட்கள் தலைவலியுடன் படத்தை பார்த்ததாக ராமிரோ அலானிஸ் தெரிவித்துள்ளார். மே மாதம் வெளியாகப் போகும் அடுத்த மார்வெல் திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் மேட்னஸ் படத்தின் ப்ரீமியருக்கே இவருக்கு அழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











