'கல்யாணத்துக்கு வந்தா கண்டிப்பா கொரோனா டெஸ்ட்..' நடிகர் ராணா -மிஹீகா திருமணத்தில் கட்டுப்பாடுகள்!
சென்னை: நடிகர் ராணாவின் திருமணத்துக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா டெஸ்ட் பரிசோதனை உண்டு என்று அவர் தந்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் ராணா.
ராஜமவுலியின் பாகுபலியில் வில்லனாக மிரட்டியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

காதல் திருமணம்
ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. மிஹீகா பஜாஜ் தனது காதலை ஏற்றுக் கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் அறிவித்திருந்தார், ராணா. ஐதராபாத்தில் வளர்ந்த இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதையடுத்து இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு டிசம்பர் மாதத்துக்குள் திருமணத்தை நடத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். இதுபற்றி ராணாவின் தந்தை சுரேஷ்பாபுவும் உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் ஒழிவதற்கான வழி இப்போது இல்லை என்பதால், இந்த மாதமே திருமணத்தை வைத்துள்ளனர். அதன்படி வரும் 8 ஆம் தேதி, ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்கிறது.

ராமநாயுடு ஸ்டூடியோ
ஐதராபாத்தில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான ராமநாயுடு ஸ்டூடியோவில் இந்த திருமணம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் இந்தியா முழுவதும் தீவிரமாகி வருகிறது. ஐதராபாத்திலும் இந்த வைரஸ் கடந்த சில நாட்களாகத் தீவிரம் அடைந்து வருகிறது.

கட்டுப்பாடுகள்
பிரபல சினிமா இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி, தேஜா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் திருமணத்துக்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

கொரோனா பரிசோதனை
இதுபற்றி நடிகர் ராணாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு கூறும்போது, 'விழாவுக்கு 30 விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமணத்துக்கு வரும் ஒவ்வொரு விருந்தினரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்கள். இந்த இக்கட்டானச் சூழலில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க நாங்கள் தயாராக இல்லை. அதனால் சினிமா துறையில் உள்ள எனது நெருங்கிய நண்பர்களை கூட அழைக்க முடியவில்லை' என்றார்.


Click it and Unblock the Notifications











