பிரசாந்த்தின் அந்தகன் படத்துடன் மோதும் கவுண்டம் பாளையம்.. ஆகஸ்ட் 9இல் ரிலீஸ்!
அரூர்: நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள படம் கவுண்டம்பாளையம். படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே படம் குறித்த சலசலப்பு நிலவி வந்தது. இந்நிலையில் படம் கடந்த ஜூலை 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் திரையரங்கை சேதப்படுத்துவோம் என்று மிரட்டுவதாகக் கூறி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கவுண்டம் பாளையம் படக்குழு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். கவுண்டம் பாளையம் படத்தினை ரிலீஸ் செய்யும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் படம் எப்போது ரிலீஸ் என்பதை விரைவில் தெரிவிப்பதாக படத்தினை இயக்கி நடித்துள்ள நடிகர் ரஞ்சித் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு நாளையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அரூர்-திருப்பத்தூர் சாலையில் திருமண மண்டபத்தில் உள்ள தியாகி தீரன் சின்னமலை சிலை அருகில், வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆகஸ்ட் 9: இதனைத் தொடர்ந்து அரூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், "நாடக காதலால் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து,தான் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு வரும் 9 தேதி திரையரங்கில் வெளியிடப்பட உள்ளது.

நல்ல காதல்: நாடக காதல் என்பதே ஒரு நடிப்பு. சைக்கிள், கார் ,பைக், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக இருப்பவர்களை தவறாக புரிந்து கொண்டு காதலர்கள் தவறாக தேர்வு செய்கின்றனர். காதலர்கள் நல்ல காதலை தேர்ந்தெடுக்க வேண்டும். கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். இந்த திரைப்படத்தில் எந்த சமூகத்தினரின் மனம் புண்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
ஏற்கனவே, "கவுண்டம் பாளையம் படத்தை வெளியிடக் கூடாது என்பதில் பலர் தீவிரமாக செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி, படத்தை திரையிட விடாமல் தடுக்கும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

நாடக காதல்: கவுண்டம் பாளையம் படத்தில் நாடகக் காதல் குறித்தும், பெற்றோரின் வலியையும் படமாக்கி உள்ளேன். இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருகிறது. யார் எதிர்க்கிறார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை. ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று ஒரு சினிமாகாரனாக எனக்குத் தெரியும். கவுண்டம் பாளையம் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் சாதாரண விவசாயிகள்தான். இந்தப் படத்தின் வெற்றிதான், என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதிலாக இருக்கும். யார் எதிர்க்கிறார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தகன்: ஆகஸ்ட் 9ஆம் தேதி ஏற்கனவே பிரசாந்த்தின் அந்தகன் படம் வெளியாகவுள்ளது. இந்த படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ஒரு வாரம் முன்னதாகவே படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கவுண்டம் பாளையம் படமும் அந்தகன் படத்துடன் ரிலீஸ் ஆகின்றது.


Click it and Unblock the Notifications











