Dhurandhar 2 Box Office: வாரிக் கொடுக்கும் வட இந்தியா.. வசூல் மழையில் துரந்தர் 2.. ஆத்தாடி இத்தனை கோடிகளா?
சென்னை: இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாகி மார்ச் 19ஆம் தேதி வெளியான படம் துரந்தர் 2. இந்த படம் ஏற்கனவே வெளியான துரந்தர் படத்தின் இரண்டாவது பாகம். ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். 18ஆம் தேதி இரவு துரந்தர் படத்தின் பிரீமியர் காட்சி இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது. குறிப்பாக திரைத்துறையில் இருந்து பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் படம் வசூலிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடு மற்றும் நடவடிக்கைகளை மையமாக கொண்டு, உண்மைச் சம்பவங்கள் மற்றும் கற்பனைக் கதை என இரண்டையும் இணைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள். படம் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது. இப்படி இருக்கையில் இதன் இரண்டாவது பாகம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

வ்சூல்: படம் முதல் நாளில் உலக அளவில் ரூபாய் 241 கோடிகளை வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது இந்தி சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படம் என்று வசூல் சாதனை படைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 145 கோடிகள் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள ரூபாய் 96 கோடிகள் வெளிநாடுகளில் வசூல் ஆனது என்றும் கூறப்படுகிறது.
இரண்டாவது நாள்: அதேபோல், இரண்டாவது நாளில் படம் இந்திய அளவில் ரூபாய் 82.35 கோடிகள் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் சாக் நிக் வலைதளம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் மார்ச் 21 ஆம் தேதி காலை 7 மணி நிலவரப்படியான தகவல். மேலும் படத்தின் இரண்டாவது நாளில் உலக முழுவதுமான அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவல்களை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்திய மொழிகளில்: படம் இன்று முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிராந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளதால் படத்தின் வசூலானது இன்று முதல் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. அதேபோல் படத்தின் நீளம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் என்பதால், ரசிகர்களுக்கு அவரவர் பிராந்திய மொழிகளில் படத்தை பார்க்கும் போது படத்துடன் இன்னும் கனெக்ட் ஆக்கிக் கொள்ள முடியும் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்ற பேச்சுக்கள் உள்ளது. படத்திற்கு திரைத்துறையில் இருந்து அதிகப்படியான பாராட்டுக்களும் அதே அளவுக்கு எதிர் விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











