பெரிய மச்சம் இருக்கு போல.. ரன்பீர் கபூரை தொடர்ந்து சல்மான் கான் ஜோடியாக மாறிய ராஷ்மிகா மந்தனா!
மும்பை: கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய நிலையில், தற்போது பாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். ரன்பீர் கபூர் உடன் இணைந்து கடந்த ஆண்டு அனிமல் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில், அடுத்ததாக சல்மான் கானுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தனது ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட்டை கொடுத்துள்ளார். அமிதாப் பச்சன் படமான குட் பை படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பாலிவுட் நடிகைகள் தென்னிந்தியாவில் நடிப்பதும், தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் நடிப்பதும் பல காலமாகவே வழக்கத்தில் உள்ள நிலையில், சமீப காலமாக தென்னிந்திய நடிகைகளின் படையெடுப்பு பல பாலிவுட் நடிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது என்கின்றனர்.
புஷ்பா 2 வருது: ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். இந்த ஆண்டு ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. மீண்டும் ஸ்ரீவள்ளியை காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவரை யாரும் போட்டுத் தள்ளிவிடக் கூடாது என்பதில் ரொம்பவே குறியாக உள்ளனர்.
தனுஷுடன் குபேரா: தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் தனுஷின் குபேரா படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தியாவிலேயே தற்போது அதிக பட வாய்ப்புகளை கொண்டு டாப் ஹீரோயினாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக மீண்டும் இந்தி பட வாய்ப்பை தட்டி பறித்துள்ளார்.

அனிமல் ஹீரோயின்: கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டி ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய படமாக மாறியது. இந்நிலையில், பாலிவுட்டில் ராஷ்மிகாவுக்கு பல முன்னணி நடிகர்கள் வலைவிரித்து வந்த நிலையில், சல்மான் கான் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். கடைசியாக சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த நிலையில், அடுத்து ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்: சல்மான் கான் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சிக்கந்தர் படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் படத்தை ஆரம்பித்த ஏ.ஆர். முருகதாஸ் தற்போது அந்த படத்தை பாதியில் நிறுத்தி விட்டு சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் தான் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











