தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியான ராஷ்மிகா மந்தனா..பிறந்தநாள் அதுவுமா சரியான பரிசு கிடைச்சுடுச்சே!
சென்னை: நடிகர் விஜய்யுடன் எப்படியாவது ஜோடி சேர்ந்து நடித்து விட வேண்டும் என தனது ஆசையை சொல்லி வந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறந்தநாள் அதுவுமா அந்த அட்டகாசமான பரிசு கிடைத்துள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகவுள்ள தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஆன் போர்ட் ஆகி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
தனது 26வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ராஷ்மிகா மந்தனாவை உற்சாகப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெங்களூரு பொண்ணு
கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. பெங்களூரு பொண்ணான ராஷ்மிகா மந்தனா கன்னட படங்களில் நடித்து வந்த நிலையில், சலோ எனும் தெலுங்கு படத்தில் நடித்தார். அதன் பிறகு விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் திரைப்படம் ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய ஹீரோயின் அந்தஸ்த்தை வழங்கியது.

நேஷ்னல் கிரஷ்
தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறிய ராஷ்மிகா மந்தனா, மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு, அல்லு அர்ஜுனின் புஷ்பா உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து அசத்தினார். ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்ஸ்டாகிராமில் 25 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தென்னிந்திய திரையுலகிலேயே அதிக ஃபாலோயர்களை கொண்ட இவர் நேஷனல் கிரஷ் என அறியப்பட்டார்.

சுல்தான் மூலம்
தமிழில் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான சுல்தான் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. அடுத்ததாக தற்போது வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார். இந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாக உள்ளது.

புஷ்பா ஹீரோயின்
கடந்த ஆண்டு இறுதியில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக கவர்ச்சி பொங்க நடித்திருந்த ராஷ்மிகா மந்தனா அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரப் போவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அரபிக் குத்துக்கு ஆட்டம்
சமீபத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் இணைந்து விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அப்போதே, இவர் தான் விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 படத்தில் நடிக்கப் போகிறார் என தகவல்கள் பரவின. பின்னர், ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிப்பார் என்றும் வதந்திகள் கிளம்பின.

பிறந்தநாள் பரிசு
1996ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தனது 26வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். காலையில் இருந்தே ஏகப்பட்ட பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது சூப்பரான பிறந்தநாள் பரிசாக இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











