கூலி தோல்வி.. நெகட்டிவ் இருந்தது.. லோகேஷிடம் அப்போவே சொன்னேன்.. நண்பரே இப்படி சொல்லிட்டாரே
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் கூலி. கமல், விஜய், கார்த்திக்கு மெகா ஹிட்டை லோகி கொடுத்திருந்ததால் இந்தப் படத்தின் மீதும் அனைவருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் ரசிகர்களால் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டது. லோகேஷையும் யாரும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் கூலி பட தோல்வி குறித்து இயக்குநரும், லோகேஷ் கனகராஜ் நண்பருமான ரத்னகுமார் ஓபனாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜுக்கு லியோ திரைப்படம் முதல் சறுக்கலாக அமைந்தது. நரபலி விஷயம், பிளாஷ்பேக் போர்ஷன் உள்ளிட்டவைகள் எல்லாம் கடுமையான விமர்சனத்தை சந்தித்தன. அந்தப் படத்தில் ஏற்பட்ட தோல்வியை ரஜினியை வைத்து இயக்கும் கூலி படத்தில் அவர் சரி செய்வார் என்று நம்பப்பட்டது. ரஜினிக்கும் அதற்கு முன் வந்த வேட்டையன் திரைப்படம் சுமார் ரகம்தான். எனவே ஜெயிலர் மாதிரி ஒரு வெற்றியை பெற கூலியில் முடிவு செய்திருந்தார்.

படம் படுதோல்வி: ஆனால் அரத பழசான கதையை இந்தக் காலத்துக்கு ஏற்றவாறு பட்டி டிங்கரிங் செய்ய பார்த்து அதில் தோல்வியடைந்துவிட்டார் இயக்குநர். ரஜினியின் ஸ்டைலும், நடிப்பும் வழக்கம்போல் மிரட்டலாகவே இருந்தது. ஆனாலும் கதையிலும், திரைக்கதையிலும் ஒன்றுமே இல்லாததால் ரஜினியின் எஃபர்ட்டுகள் எல்லாம் வீணாகிப்போகின. தோல்வி என்பதோடு மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் கூலி சந்தித்தது ரஜினி ரசிகர்களிடம் மேற்கொண்டு வேதனையை உண்டு செய்தது.
லோகேஷை விடவில்லை: முக்கியமாக லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்தார்கள். அவர் என்னதான் தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களை கொடுத்தாலும் அவரது ஸ்டைல் ஆஃப் மேக்கிங்கும், கதைக்களமும் ஒரே மாதிரி இருக்கிறது. அவரால் நீண்ட வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியாது என அப்போதே சொன்னது கூலி நிரூபிக்கப்பட்டதாகவும் ஒருதரப்பினர் சொன்னார்கள். லோகேஷும் இந்த தோல்வியால் கொஞ்சம் அப்செட்தான். அதனை வெளியே காண்பித்துக்கொள்ளவில்லை. அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார்.
ரத்னகுமார் பேட்டி: இந்நிலையில் இயக்குநரும், லோகேஷின் நண்பரும், மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் லோகேஷுடன் சேர்ந்து வேலை பார்த்தவருமான ரத்னகுமார் கூலி பட தோல்வி குறித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "லோகேஷ் கனகராஜ் வழக்கமாக பயன்படுத்தும் பழைய பாடல்கள், கேமியோ ரோல்கள், மல்டி ஸ்டாரர் எல்லாம் கூலியிலும் இருந்தது. ஆனால் லியோ படத்தில் நரபலி விஷயத்தை போன்றே, இதில் பிணங்களை அப்புறப்படுத்தும் ஐடியா எல்லோருக்கும் அந்நியமாகவும், விசித்திரமாகவும் பட்டது.
அப்போதே சொன்னேன்: அதனை ஒரு சேரை பயன்படுத்தி லைட்டாக காட்ட முயன்றார். அவரிடம் நான் அப்போதே, 'உங்களின் எல்லா அம்சங்களும் இதில் இருக்கிறது. ஆனால் அதுமட்டும் போதாது. மக்கள் உங்களிடமிருந்து இன்னும் சிறந்ததை எதிர்பார்ப்பார்கள்' என கூறினேன். விக்ரம் படத்துக்கு பிறகு மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி படங்களில் கேமியோ ரோல்களும், பழைய பாடல்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அது ரொம்பவே ரொட்டீனாகிவிட்டது. அதுவும் கூலியில் சோர்வாக மாற்றிவிட்டது. இந்தப் படத்தை வெளியே இருந்து பார்க்கையில் நெகட்டிவ் அதிகமாக இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications
