மார்க் ஆண்டனி மட்டுமில்லை ரத்னம் படத்துக்கும் வந்த சிக்கல்.. விஷால் கடுப்புக்கு இதுதான் காரணமா?
சென்னை: மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் சமயத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தின் ரிலீஸை தள்ளிப் போட சொல்லி பிரச்சனை செய்ததாக நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு பயம் இல்லை என்றும் சினிமாவில் துணிச்சலாக இது பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து மார்க் ஆண்டனி படம் வெளியாகும் சமயத்தில் விஷால் ஏன் பேசவில்லை என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

மார்க் ஆண்டனி படத்துக்கு மட்டுமின்றி விஷால் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ரத்னம் படத்துக்கும் ரிலீஸ் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதால் தான் விஷால் தற்போது வாய் திறந்து பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைக்குள் சினிமா: ரெட் ஜெயண்ட் நிறுவனம் சினிமாவை தனது கைக்குள் வைத்துக்கொண்டு மற்ற தயாரிப்பாளர்களை தொல்லை கொடுப்பதாக நடிகர் விஷால் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகக்கூடாது என ரெட் ஜெயண்ட் நிறுவனம் தடுத்ததாகவும் தங்களை தள்ளி வர சொன்னதாகவும் கூறியுள்ளார்.
கோபப்பட்ட விஷால்: என் படத்தை தள்ளி வர சொல்ல உனக்கு அதிகாரம் யார் கொடுத்தது. சினிமா இங்கே எவனுக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. யாராவது சினிமாவை சொந்தம் கொண்டாட நினைத்தால் அவங்க உருப்படவே முடியாது என கொந்தளித்து பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலினிடம் தான் சேர்த்து விட்ட நபர் தான் ரெட் ஜெயண்டில் இருந்து கொண்டு தற்போது இதுபோன்ற வேலையை பார்த்து வருகிறார் எனக் கூறியுள்ளார் விஷால்.
அரண்மனை 4 vs ரத்னம்: மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸுக்கு மட்டுமின்றி வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாக உள்ள விஷாலின் ரத்னம் படத்துக்கும் ரிலீஸ் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் அதன் வெளிப்பாடு தான் விஷால் இப்போது இப்படி கொந்தளித்து பேச காரணம் எனக் கூறுகின்றனர். சுந்தர். சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படமும் விஷாலின் ரத்னம் படத்துடன் நேரடியாக மோதவுள்ள நிலையில், தான் இந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்திருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











