Kadhalikka Neramillai Blue Sattai Maran Review: கா.நே படத்துக்கு வெரிகுட் சொன்ன ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், வினய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் காதலிக்க நேரமில்லை. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு நேற்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், பீல் குட் மூவி என்ற விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், " படத்தின் கதையைப் பொறுத்தவரையில் இரண்டு ஜோடிகள் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் முயற்சியில் உள்ளார்கள். இதில் நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ளவிருந்தவர் மன்னிக்கமுடியாத குற்றத்தைச் செய்ததால், அவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் பார்ட்னர்ஷிப் வாழ்க்கையில் விருப்பம் இல்லை என்றாலும், குழந்தை பெற்றுக்கொள்ள நித்யா மேனன் முயற்சி செய்கின்றார். அதேபோல், ரவி மோகனைப் பொறுத்தவரையில், குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு முற்றிலுமாக விருப்பம் இல்லை. அதிலும் குழந்தை பெற்றுக்கொள்வதில் அவருக்கு துளியும் விருப்பம் இல்லை. இதனால் அவரது திருமணமும் நின்று விடுகின்றது. இதன் பின்னர் ரவி மோகனும் நித்யா மேனனும் சந்தித்துக்கொள்கின்றார்கள். அதன் பின்னர் அவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் கதை வித்தியாசமான கதைதான். இந்தக் கதைதான் படத்தின் பிரச்னையாகவும் மாறியுள்ளது. படம் முழுவதும் Gay Parenting, சிங்கிள் பேரண்டிங், பிரேக்-அப், லிவிங் டூ கெதர் என்பது குறித்து பேசக்கூடிய படம். இந்த விஷயங்கள் நாம் அடிக்கடி கேள்விப்படும் விஷயங்கள்தான். இந்த விஷயங்களை கேள்விப்படாதவர்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும் இருக்கின்றார்கள். படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. படத்தினை அவர்களின் சௌகரியத்திற்கு வளைத்துள்ளார்கள். புதிதாக எதுவுமே இல்லை.

இயக்கம்: கதையாகவும் திரைக்கதையாகவும் படத்தில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை என்றாலும், எடுத்துக் கொண்ட கதையை ஒரே நேர்கோட்டில் கையாண்டுள்ளார்கள். சிறப்பான இயக்கம், அனைத்து துறையைச் சேர்ந்தவர்களிடமும் நல்ல வேலை வாங்கியுள்ளார். குறிப்பாக நடிகர்களிடம் நல்ல வேலை வாங்கியுள்ளார் இயக்குநர். ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. இந்த அளவிற்கு மேக்கிங் இல்லை என்றால், இந்த மாதிரி ஸ்லோவான படத்தினை பார்த்திருக்க முடியாது. படத்தில் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரம் வருகின்றது. அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள வினய் சிறப்பாகவே நடித்துள்ளார்.

பீல் குட் : படம் முழுவதும் ஸ்லோவாக இருந்ததே தவிர, சலிப்புத் தட்டவில்லை. இரண்டாம் பாதியில் இரண்டாவது கதாநாயகி வந்த பின்னர் படத்தில் ஒரு கிரிப் கிடைத்தது. மொத்தத்தில் படம் எப்படி இருக்கின்றது என்றால், ஒரு வித்தியாசமான அதேநேரத்தில் கொஞ்சம் சிக்கலான கதையை எடுத்து படமாக்கியுள்ளார்கள். இந்த வித்தியாசமான கதையை படமாக எடுத்தால், கலாச்சார காவலர்கள் ஜாம்பீஸ் மாதிரி வந்து கடித்து வைத்துவிடுவார்கள் என யோசிக்காமல், படத்தினை தைரியமாக எடுத்துள்ளார்கள். அதற்காக பாராட்ட வேண்டும். படம் ஸ்லோவாக போனாலும் ஒரு பீல் குட் அனுபவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது" இவ்வாறு தனது விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











