தோனியை ஃபாலோ செய்யும் ஜடேஜா.. திரைத்துறையில் களமிறங்கினார்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா திரைப்படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் கவனம் செலுத்துவது சமீபத்தில் அதிகரித்துவருகிறது. அதேபோல் கிரிக்கெட் தொடர்பான படங்களும், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாக உருவாக்கப்படுகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் தமிழ் படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினர்.

சினிமாவில் களமிறங்கியிருக்கும் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவரும் தமிழ்நாடு தனக்கு இரண்டாம் தாய் வீடு என பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி திரைப்பட த்யாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதனால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தோனி தயாரிக்கும் முதல் படம்
தோனி படம் தயாரிக்கப்போகிறார் என தெரியவந்ததும் அவர் எந்தப் படத்தை முதலில் தயாரிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழ்நாடு மீது தனக்கு இருக்கும் அன்பை உறுப்படுத்தும் விதமாக முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறார். தோனி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் தமிழ் படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தோனி தயாரிக்கும் படத்தின் கலைஞர்கள்
தோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். லவ் டுடே படத்தில் நடித்து புகழடைந்த இவானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமிழ்மணி என்ற இயக்குநர் படத்தை இயக்க அவரே படத்துக்கு இசையும் அமைக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது.

தோனி வழியை ஃபாலோ செய்யும் ஜடேஜா
இந்நிலையில் தோனி போலவே ஜடேஜாவும் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்திருக்கிறார். அதன்படி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கும் ஜடேஜா தான் தயாரிக்கவிருக்கும் படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
ஜடேஜா தயாரிக்கும் படத்துக்கு பச்சாதர் கா சோரா என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ரன்தீப் ஹூடா கதாநாயகனாக நடிக்க நீனா குப்தா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயந்த் என்பவர் படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் தோனியை தனது குருவாக ஏற்றுக்கொண்ட ஜடேஜா தற்போது தோனி வழியை பின்பற்றி திரைத்துறையில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஜடேஜா தயாரிக்கவிருக்கும் படம் நல்ல வசூலை பெற்று தொடர்ந்து தயாரிப்பாளராக அவர் பயணிக்க வேண்டும் என மகேந்திர சிங் தோனியின் ரசிகர்களும், ரவீந்திர ஜடேஜாவின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











