விஜய் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த கோபத்துக்கு அதுதான் காரணம்.. ஓபனாக சொன்ன பிரபலம்
சென்னை: விஜய் ரசிகர்கள் தலைவா படத்தை எப்போதுமே மறக்கமாட்டார்கள். அப்படத்துக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட குடைச்சல் இன்றுவரை ஆறாத வடுவாகவே அவர்களது மத்தியில் இருக்கிறது. சொல்லப்போனால் இப்போது ஜனநாயகன் சந்தித்திருக்கும் பிரச்னையை விட பெரிதாக அந்தப் படத்துக்கு பிரச்னை இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் விஜய் மீது ஜெயலலிதா ஏன் கோபப்பட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா படம் சுமாரான வரவேற்பை பெற்ற படம். ஆனால் அந்தப் படம் சென்சேஷனல் ஆனதற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா காரணமாக அமைந்தார். படத்தின் பெயருக்கு கீழே டைம் டூ லீட் என்ற ஒரு வாசகம் இருந்தது. அதை விரும்பாத ஜெ, வேறு வேறு காரணங்களை சொல்லி படத்துக்கு தடை போட்டார். தடை போட்ட கையோடு கூலாக அவர் கொடநாடு பங்களாவுக்கு சென்றுவிட்டார்.
கை கட்டிய விஜய்: ஜெ கூலாக இருந்தாலும் விஜய்யும், விஜய் ரசிகர்களும் ரொம்பவே நொந்து போனார்கள். பல முயற்சிகள் செய்தும் படம் ரிலீஸாகவில்லை. ஒருகட்டத்தில் கொடநாட்டுக்கே எஸ்.ஏ.சந்திரசேகரும், விஜய்யும் சென்றுவிட்டார்கள். எப்படியாவது அவரை பார்த்து ரிலீஸ் சிக்கலை தீர்த்து விடலாம் என்று நினைத்துதான் சென்றார்கள். ஆனால் ஜெயலலிதாவோ தந்தையையும், மகனையும் சந்திக்கக்கூட இல்லை. இதனால் மேற்கொண்டு அவர்கள் அப்செட் ஆனார்கள்.

கை கட்டிய விஜய்: நேரில் சந்திக்க முடியாததால் ஏமாற்றத்தோடு சென்னை திரும்பிய விஜய்; உடனடியாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கைகளை கட்டியபடி பவ்யமாக, ஜெயலலிதாவின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று சொல்லிவிட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கு முதலமைச்சர் அம்மா ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதனையடுத்துதான் தலைவா படம் ரிலீஸானது. அப்போது விஜய் பட ரிலீஸுக்கு வர ஆரம்பித்த பிரச்னை இப்போது ஜனநாயகன் வரை தொடர்கிறது.
ஜனநாயகன் பிரச்னை: ஜனநாயகனை பொறுத்தவரை அவரது அரசியல் பிரவேசத்தால்தான் ரிலீஸுக்கு முட்டுக்கட்டை விழுந்திருப்பதாக பெரும்பான்மையானோரால் கருதப்படுகிறது. அதேசமயம் இப்படியெல்லாம் நடக்கும் என்று தமக்கு முன்கூட்டியே தெரியும் என்றும்; இதற்கெல்லாம் மனதளவில் தயாராகத்தான் இருந்தேன் என்றும் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் பேசியதாக தெரிகிறது. இந்நிலையில் விஜய் மீது ஜெயலலிதாவுக்கு கோபம் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார்.
அந்தணன் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஜய்தான் 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றிக்கு உதவினார் என்பதை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை பற்றி எல்லோருக்குமே தெரியும். விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தன்னிச்சையாக நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களை கூட்டியதும் ஜெயலலிதாவுக்கு உறுத்தலாக இருந்தது. திரைத்துறையிலிருந்து அரசியல் கட்சி ஆர்மபித்த கடைசி ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் இருந்தது. டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமாரை எல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை.
இளைஞர்கள் பெரிதும் விரும்பும் நபராக விஜய் இருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை. அதுதான் தலைவா படத்துக்கு பெரிய பிரச்னையாக மாறியது. ஜெயலலிதா இருக்கும்போது ஒரு கட்சியை விஜய் ஆரம்பித்திருந்தால் அதை அழித்திருப்பார். ஆனாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கம் அப்போதே விஜய்க்கு இருந்தது என்பதுதான் உண்மை" என்றார்.


Click it and Unblock the Notifications