twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழைய பாடல்கள் ஏன் தரமாக இருக்கின்றன ? - ஓர் ஆய்வுப் பார்வை

    By Ka Magideswaran
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    தமிழ்த் திரைப்பாடல்கள் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. ஒரு படத்தை வெற்றி பெறச் செய்வதிலிருந்து உடுமதிப்புள்ள (Star Value) நடிகர்களைத் தோற்றுவிப்பது வரைக்கும் திரைப்பாடல்களே முதன்மையான பங்கினை வகிக்கின்றன. பாடல்கள் அமைந்தால்தான் படத்தின் வெற்றி உறுதிப்படும். பெரிய நடிகர்கள் தத்தம் படங்களில் சிறந்த பாடல்கள் அமைவதற்கு நாட்கணக்கில் வினைக்கெடுவார்கள். நாம் தொடர்ந்து கேட்கும் பாடல்கள் பெரிய நடிகர்கள் நடித்த படங்களில்தாம் இடம்பெற்றிருக்கும். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எம்ஜிஆரின் திரைக்கட்டமைப்பு அவருடைய படப்பாடல்களால் உருவானது என்றால் மிகையில்லை. அத்தகைய திரைப்பாடல்களின் வெற்றிக்காகவே காலந்தோறும் பல்வேறு இசைக்கலைஞர்களும் பாவலர்களும் உழைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

    திரைப்பாடல்கள் ஆயிரக்கணக்கில் வெளியாகியிருக்கின்றன. தமிழில் அன்றுமுதல் இன்றுவரை ஆறாயிரத்திற்கும் மிகுதியான திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கக்கூடும். ஒவ்வொரு படத்திலும் ஐந்து பாடல்கள் என்று வைத்துக்கொண்டால்கூட இதுவரை முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் வெளியாகியிருக்கும். படம்வெளிவந்தவை, வெளிவராதவை, பதிவோடு நின்றவை என்று பலவற்றையும் கணக்கிட்டால் ஐம்பதாயிரத்திற்கும் மிகுதியான பாடல்கள் இங்கே உருவாகியிருக்கும். புற்றீசல் போலப் புறப்பட்ட புதுக்கவிஞர்களிடமிருந்து ஐம்பதாயிரம் புதுக்கவிதைகள் தோன்றியிருக்குமா என்பதுகூட ஐயம்தான். ஆக, இங்கே எழுதப்பட்டவற்றில் திரைப்பாடல்களே எண்ணிக்கையில் மிகுதியானவை என்பதைப் பலரும் ஒப்புக்கொள்வர். அவ்வாறு எழுதப்பட்ட திரைப்பாடல்கள் தமிழர்களின் கலைத்திளைப்பைத் தொடர்ந்து கைப்பற்றி வைத்திருந்தன. திரைப்படம் என்கின்ற பெருவாய்ப்பு அப்பாடல்களின் பரவலுக்கு நற்காரணமாயிற்று. நாடகப் பதிவின் நடுச்சூழல் வரிகள் என்பதால் திரைப்பாடல்கள் பாமரர்களையும் சென்றடைந்தன. முப்பதாண்டுகளுக்கு முன்வரை தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாத மூத்த தலைமுறையினர் மிக்கிருந்தனர். திரைப்படங்கள் அவர்களை எளிதில் வயப்படுத்தின. திரைப்பாடல்கள் அவர்களின் மனத்திற்குள் செவிவழியே நுழைந்தன. அப்பாடல்களைப் படித்தறியவில்லை. கேட்டறிந்தனர்.

    reason for the literary quality of old songs


    தொண்ணூறுகள்வரை இருந்த இந்நிலை இன்றைய இணையக் காலத்தில் நன்றாகவே மாறிவிட்டது. இன்றுள்ள தலைமுறையினர் பலரும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அவர்களுடைய எழுத்துப் படிப்பறிவு தமிழ், ஆங்கிலம் என்று இருமொழிகளிலும் பரந்திருக்கிறது. அதனால் கேட்பதைவிடவும் படிப்பதில் திளைப்புடைய கூட்டமாக அவர்கள் உருவாகியிருக்கின்றனர். சற்று நேரம் நிற்கவோ அமரவோ வாய்த்தால் ஒவ்வொருவரும் தத்தம் கைப்பேசியில் புதைந்துவிடுகின்றனர். அங்கே அவர்களுடைய வினை படிப்பதும் காண்பதுமாகவே இருக்கின்றது. அன்றேல் காதணிபாடி அணிந்து யாருடனேனும் வெட்டிப் பேச்சில் ஈடுபடுகின்றனர். காணொளிக் காட்சிகளில் கேட்கின்றனர். முன்பிருந்த பெரும்பான்மையரைப்போல் இன்றைய பெரும்பான்மையர் இல்லை. இன்றைய தலைமுறையினர் செவிப்புலன் வழியாக மட்டுமே பெறுவதில்லை. படிக்கின்றனர், பார்க்கின்றனர், பேசுகின்றனர், படமெடுக்கின்றனர், பகிர்கின்றனர், தம் கருத்தைக் கூறுவதற்கு எழுத்து வழியாகப் பங்கேற்கவும் செய்கின்றனர். பாட்டுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட மனம் பலவாறாகப் பிரிந்துவிட்டது. அதனால்தான் இன்றைய பாடல்கள் பல வெற்றி பெறுவதில்லை. படங்களும் பார்க்கப்படுவதில்லை. திரைப்படம் பார்க்கச் சென்றால் பார்வையாளர்களின் நூறு கைப்பேசிகள் இடையூறாக ஒலிக்கின்றன. அதற்காகவே இன்றைய திரைப்படங்களில் ஒலியற்ற அமைதி நொடிகளே இல்லாதபடி பார்த்துக்கொள்கிறார்கள்.

    பழைய பாடல்கள் மக்களைப் பண்படுத்தின என்று உறுதியாகச் சொல்லலாம். பழைய பாடல்களைக் கேட்டவர்கள் முதற்கண் எளிய மக்கள். அவர்களுக்கு ஏதுவான எளிமையும் பொருட்சுவையும் அப்பாடல்களில் இருந்தன. தொடக்கக்காலத் திரைப்படப் பாடல்களில் வடமொழிக் கலப்பு மிக்கிருந்தபோதும் அவற்றை நம்மக்கள் புறந்தள்ளவில்லை. வடமொழிக் கலப்பு என்று ஓர் எள்ளலுக்காகச் சொல்கின்றோமேயன்றி, உண்மையில் நல்ல தமிழில்தாம் பல பாடல்கள் தோன்றின. “நின்மதி வதனமும் நீள்விழியும் கண்டு என்மதி மயங்கினேன்” என்ற தொடரில் இலங்கும் தமிழ்ச்சுவை பாமரர்களையும் படித்தவர்களையும் ஒருசேர மயக்கவல்லது. இன்றைக்கு இருந்தவர்களைவிடவும் அன்றைக்கிருந்தவர்கள் கல்வியறிவில் குறைந்திருந்தனர். ஆனால், அன்றைய மக்கள் செறிவாக அமைந்த பாடல் வரிகளைச் சுவைத்தனர், ஏற்றனர், விரும்பி மகிழ்ந்தனர். அன்றைக்கிருந்ததைவிட இன்றைய கல்விநிலை பன்மடங்கு மேம்பட்டிருந்தும்கூட இன்றைய தலைமுறையினரின் பாடல்கள் ஏன் ஈனச்சரக்குகளாக இருக்கின்றன ? கல்வியிலும் படிப்பிலும் வாழ்க்கைத் தரத்திலும் மேம்பட்டோர் வாழ்கின்ற இக்காலத்தில் கலைச்சுவைப்புக்கு மட்டும் ஏன் தலைகீழ் நிலைமை ? காரணம் என்ன ?

    எப்போதுமே பார்வையாளர்களைக் குறைகூறுவது மிகவும் எளிதாக இருக்கிறது. “இதைக்கொடுத்தால்தான் மக்கள் விரும்பி ரசிக்கிறாங்க…” என்று கூறிவிடுவார்கள். இன்றைய கல்விப்பரவலுக்கு ஏற்ப நம் பாடல்கள் பழைய பாடல்களைவிடவும் உயர்ந்த தரத்தில்தானே இருக்க வேண்டும் ? ஆனால், பழைய பாடல்களோடு ஒப்பிடவே முடியாதபடி தரந்தாழ்ந்து இருக்கின்றனவே…! இங்கேதான் நாம் பார்வையாளர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறோம். மக்கள் உயர்வானவற்றைக் கொடுத்தால் விரும்பவே செய்கின்றார்கள். தாழ்ந்தவற்றைக் கொடுத்தாலும் “அது என்ன?” என்று பார்த்து வைக்கிறார்கள். குறை அவர்களிடத்தில் இல்லை. கலைஞர்களிடமும் படைப்பாளிகளிடமும் இருக்கிறது.

    கலைச்செயலில் ஒரு தொடர்கண்ணி தொடர்ந்து செயல்படும். ஒரு படைப்பு இன்னொரு படைப்பை உருவாக்கும். எங்கோ தொலைவிலுள்ள ஊர்ப்புறத்தில் ஒரு பெண்படும் பாடுகளைப் படமாக எடுத்துவிட்டால், அந்த வெற்றியில் வியப்பவர்கள் அடுத்தடுத்து அதைப் போன்ற படமாகவே எடுத்துத் தள்ளுவார்கள். திரைப்பாடல்களும் அவற்றுக்கு முன்னே இறைந்து கிடந்த இலக்கிய வளத்திலிருந்து தோன்றத் தொடங்கியவையே. தொடக்கக் காலப் படங்களில் பாடல் எழுத வந்தவர்கள் அவர்களுக்கு முன்னே இருந்த இலக்கியப் பாடல்களைக் கற்றவர்களாக இருந்தார்கள். “நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே” என்று எளிமைக்குள் பொருள் தைத்து எழுதினார்கள். பாரதியின் பாடல்கள் வள்ளலாரின் மொழியைப் போன்றே இருக்கும். வள்ளலாரும் பாரதியும் இன்னபிற நூற்றுக்கணக்கான தமிழ்ப்பாவலர்களும் இயற்றிய பாக்களத்திலிருந்து வந்தவர்கள் பழைய பாடல்களை இயற்றினார்கள். அவற்றை மக்கள் விரும்பிக் கேட்டனர்.

    பின்னால் வந்த கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், புலமைப்பித்தன் போன்றவர்களும் மரபுத் தமிழ்வளத்தால் உரம்பெற்ற வரிகளை யாத்தனர். மரபிலிருந்து வெளியேறிய புதுக்கவிதைகளைப் பயின்று வளர்ந்த கவிஞர்கள் எண்பதுகளுக்குப் பிறகு தலையெடுத்தார்கள். இவற்றுக்கிடையே நவீன கவிதைப் போக்கின்படி திணை பால் எண் இடம் காலம் ஆகிய அடிப்படைகள்கூடத் தெரியாதவர்களின் வரிகள் யானை கழிந்ததுபோல் எங்கெங்கும் இறைந்து கிடந்தன. அவ்வரிகளை எழுதியோரும் அவ்வரிகளைப் படித்து எழுதத் தொடங்கியோரும் இன்றைய திரைப்பாடல்களை எழுதிக்கொண்டுள்ளார்கள். அவர்களின் ஞானப் பற்றாக்குறையே திரைப்பாடல்களில் வெளிப்படுகின்றது. பழந்தமிழ் இலக்கியம் படித்தவர்கள் எழுதிய பழைய பாடல்களின் உயர்தரத்தை இன்றைய பாடல்கள் எட்ட முடியாமைக்கு முதற்காரணம் இஃதே. “கற்றனைத்தூறும் அறிவு” என்று வள்ளுவர் கூறிய அதே காரணம்.

    English summary
    Cinema Article about the reason for the literary quality of old songs
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X