மீண்டும் தணிக்கை என்பது தவறான முன்னுதாரணம்... திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
மெர்சல் படத்தை மீண்டும் தணிக்கை செய்வது என்பது தவறான முன்னுதாரணமாகும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை: தணிக்கை செய்யப்பட்ட மெர்சல் படத்தை மீண்டும் தணிக்கை செய்வது என்பது தவறான முன்னுதாரணமாகும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் அந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்து காட்சிகளை அகற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரியுள்ளனர்.

தயாரிப்பாளர் முரளியும் இதற்கு ஒப்புக் கொண்டு, அதற்கான கடிதத்தை சென்சார் வாரியத்தில் அளிக்கவுள்ளார். இந்நிலையில் காட்சிகளை நீக்க கூடாது என்றும் மறு சென்சார் செய்ய கூடாது என்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறுகையில், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வற்புறுத்துவதற்காக தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஒரு திரைப்படத்தை பார்க்கும் போது பலருக்கும் பலவிதமான கருத்துகள் எழலாம்.

அக்கருத்துகளை பகிர்வதோடு இருக்கலாமே தவிர தணிக்கை செய்யப்பட்ட பிறகும் அதில் உள்ள காட்சிகளை நீக்க கூறுவது தவறு. தணிக்கை முடிந்த பிறகும் காட்சிகளை நீக்க கூறுவது ஜனநாயக முறைப்படி தவறாகும். இதை தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு போதும் அனுமதிக்காது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











