”அந்த ராமசாமி இல்லை” பிரச்சனை.. சந்தானத்தை கழட்டி விட்டாரா உதயநிதி ஸ்டாலின்.. என்ன ஆச்சு?
சென்னை: டிக்கிலோனா படத்தில் டைம் மெஷின் கான்செப்ட்டை வைத்து சந்தானத்தை பல கெட்டப்புகளில் நடிக்க வைத்திருந்த இயக்குநர் கார்த்திக் யோகி அடுத்ததாக மீண்டும் சந்தானத்தை வில்லேஜ் கெட்டப்பில் மாற்றி வித்தியாசமான டைட்டிலில் வடக்குப்பட்டி ராமசாமி எனும் படத்தை இயக்கி உள்ளார். வரும் பிப்ரவரி 2ம் தேதி அந்த படம் வெளியாகிறது. அந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரெட் ஜெயண்ட் போஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் போஸ்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சந்தானமும் உதயநிதி ஸ்டாலினும் இத்தனை ஆண்டுகள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ராஜேஷ். எம் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் பார்த்தா கதாபாத்திரத்தில் சந்தானம் பண்ண காமெடியால் தான் உதயநிதி படத்தை ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து ஹிட்டாக்கினர். தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், நண்பேன்டா உள்ளிட்ட படங்களிலும் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கினர்.

வடக்குப்பட்டி ராமசாமி வசனம்: சந்தானம் ஹீரோவான பின்னர் உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால், எப்போதுமே அவரை முதலாளி என்றே அழைத்து வந்தார். இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், பொங்கலை முன்னிட்டு வெளியான டிரெய்லர் காட்சியில் "ஊருக்குள்ள சாமியே இல்லைன்னு சொல்லிட்டுத் திரிஞ்சானே அந்த ராமசாமியா நீ" என்கிற குரலுக்கு "நான் அந்த ராமசாமி இல்லை" என சந்தானம் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெரியாரை அவமதித்தவர் படத்தை எப்படி ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிடலாம் என்கிற கேள்வியை திமுகவினர் எழுப்பினர்.
விலகிய ரெட் ஜெயண்ட்: இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளது. அதன் அறிவிப்பு போஸ்டரில் திடீரென ரெட் ஜெயண்ட் வழங்கும் என்கிற லோகோவையே காணவில்லை. அதே போல ரெட் ஜெயண்ட் ட்விட்டர் பக்கத்திலும் வடக்குப்பட்டி ராமசாமி புரமோஷன் இடம்பெறவில்லை. மேலும், ரெட் ஜெயண்ட்டுக்கு பதிலாக ரோமியோ பிக்சர்ஸ் ரிலீஸ் என்கிற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ரெட் ஜெயண்ட் இந்த படத்தை வெளியிடவில்லை என்பது உறுதியாகி விட்டது.

எல்லாமே ஏமாற்று வேலையா?: "இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுவதில் விமர்சனம் எழுந்ததால், ரெட்ஜெயண்ட் ஊழியர் ராகுல் பெயரில் நடத்தப்படும் பினாமி நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் பெயரில் இந்தப் படம் வெளியிடப்படுகிறது." என சவுக்கு சங்கர் ட்வீட் போட்டுள்ளார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்தையும் இதே ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் ரிலீஸ் செய்துள்ளார் என்றும் இவர் உதயநிதி ஸ்டாலினின் பினாமி என்றும் கூறியுள்ளார். ஆக மொத்தம் தனது நண்பேன்டா சந்தானத்திற்கு மறைமுகமாக உதயநிதி ஸ்டாலின் உதவுகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











