தமிழ் சினிமாவில் கமிஷன்களை ஒழிக்கணும்.. ரெட் லேபிள் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

சென்னை: 'ரெட் லேபில்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான லெனின், தமிழ் திரையுலகில் நிலவும் "கமிஷன்" கலாச்சாரத்திற்கு எதிராகப் பெரும் குரல் எழுப்பியுள்ளார். பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், "சினிமாவில் கமிஷன்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்" என அவர் ஆவேசமாகப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள 'ரெட் லேபில்' திரைப்படத்தை கே.ஆர். வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. இப்படத்தில் லெனின் கதாநாயகனாக நடிக்க, அஸ்மின் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Red Label Tamil Film Producer Lenin Calls To End Film Commissions

இப்படத்தின் கதை பொன். பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டுள்ளார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் தோன்ற, இயக்குநர் அனுமோகன், தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் படக்குழுவினர் மத்தியில் பேசிய தயாரிப்பாளர் லெனின், தான் நேரம் தவறாமையைப் பின்பற்றுபவர் என்றும், அதனாலேயே சரியாகப் படப்பிடிப்புக்கு வந்த இயக்குநரைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். "சினிமாவிலும் முறையான, நேர்மையான அணுகுமுறையை நான் கடைப்பிடிக்க விரும்பினேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த ஒரு படத்திலேயே எனக்குப் பலவிதமான அனுபவங்கள் கிடைத்தன. ஐந்து கதாநாயகிகளைப் பார்த்த பிறகுதான் அஸ்மின் தேர்வானார்," என லெனின் தெரிவித்தார். மேலும், "படத்திற்குத் தலைப்பு பதிவு செய்வதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. முதலில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தோம், ஆனால் அது காலாவதியாகிவிட்டதாகவும், புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை எனக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது," என்றார்.

Red Label Tamil Film Producer Lenin Calls To End Film Commissions

திரைப்பட வர்த்தக சம்மேளனத்தில் தலைப்பு பதிவு செய்யும் முறைகளில் ஒரு சீர்மை தேவை என்று சுட்டிக்காட்டிய லெனின், "பிலிம் சேம்பரை கணினிமயமாக்கினால் பல பிரச்சினைகள் எளிதில் தீரும். இந்த வேலையைச் சுலபமாக்க நான் இலவசமாக உதவத் தயார். ஆவண வேலைகளும், அலைச்சல்களும் தேவையில்லை, எல்லாவற்றையும் எளிமையாக்கலாம்," என்று யோசனை தெரிவித்தார்.

"நான் முதலில் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டுத்தான் நடிகர்களைத் தேர்வு செய்தேன். எனது இசையமைப்பாளருக்கு கேரளாவில் விருது கிடைத்ததும், எடிட்டருக்கு தமிழக அரசு விருது கிடைத்ததும் இந்தப் படத்திற்கு நான் சரியானவர்களைத் தேர்ந்தெடுத்ததற்கான சான்றுகள்," என லெனின் பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு படத்திற்கு முகமதிப்பு கொண்ட நடிகர்கள் தேவைதான்; இருந்தாலும், நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் மிக அவசியம். நான் பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வரவில்லை, இதன் மீதான காதலால் வந்துள்ளேன்," என வலியுறுத்தினார்.

படத்தின் கதை 2023-ல் தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால், வெளிவந்த திரைப்படங்களில் தங்கள் படத்தின் காட்சிகள் தோன்றுவதுபோல் இருந்ததால், கடந்த ஆண்டு வந்த அனைத்துப் படங்களையும் பார்த்ததாகவும் லெனின் தெரிவித்தார். "வாரம் எட்டு படங்கள் வெளியாகின்றன. பலவற்றில் நாங்கள் நினைத்த கதைக்கருக்கள் இருப்பதாகத் தோன்றினாலும், எங்களது கதை பலமாக இருந்ததால் தைரியமாக இருந்தோம்," என அவர் கூறினார்.

படப்பிடிப்பில் தேவையற்ற செலவுகளைக் குறைக்க, ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்தே கொடுப்பேன் என்று கூறி, தனது சிக்கன நடவடிக்கைகளைக் குறிப்பிட்டார். "கமிஷன்கள் எனும் போக்கு சினிமாவில் எதற்கெடுத்தாலும் இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது," என்றார்.

Red Label Tamil Film Producer Lenin Calls To End Film Commissions

"ஒரு சினிமாவிற்கு இசையமைப்பாளரும், எடிட்டரும் முக்கியமானவர்கள். அவர்களால்தான் ஒரு படத்தை சிறப்பாகக் கொண்டு வர முடியும். இசையமைப்பாளர் அளவுக்கு எடிட்டர் வெளியே தெரிவதில்லை. நான் நடித்தபோது இரண்டு நாட்கள் சுமாராகத்தான் நடித்தேன், எனக்கு என் நடிப்பில் சந்தேகம் இருந்தது. சில இடங்களில் தொய்வு இருந்தாலும், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் அனைத்தையும் சிறப்பாகத் தொகுத்து, குறைபாடுகள் தெரியாத அளவுக்குப் படத்தை மேம்படுத்தினார்," என நன்றியுடன் குறிப்பிட்டார்.

"படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டிருந்தன. ஆறாவது நாள் படப்பிடிப்பை நிறுத்துவோம் என்றார்கள். நான் முதல் போட்டுப் படம் எடுக்கிறேன், அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்ற சந்தேகம் வந்திருக்கும்," என லெனின் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.

"இப்படி 2023-ல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியீட்டு தேதி வரை ஏதாவது தடைகளும், முரண்பாடுகளும் தொடர்ந்து இருந்தன. இருந்தபோதிலும், இயக்குநரும் மற்றவர்களும் இணைந்து இந்தப் படத்தை முடித்திருக்கிறோம்," என தனது போராட்ட அனுபவங்களை விளக்கினார்.

சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் செய்யும் அனைத்துச் செலவுகளும் கணக்கில் சேருமா என்றால், இல்லை என லெனின் கேள்வி எழுப்பினார். "ஒரு படத்திற்கு 5 கோடி செலவு செய்தால், அதில் 10 முதல் 15 சதவீதம் வரை செலவில் வராது, கமிஷனாகப் போய்விடுகிறது," என்று அவர் குற்றம்சாட்டினார்.

"நான்கு ஷெட்யூலுக்கு நான்கு யூனிட்களை மாற்றினேன். முதலில் ஒரு லட்சம் கேட்டார்கள், பிறகு 90 ஆயிரம், 80 ஆயிரம், 70 ஆயிரம் என மாறிக்கொண்டே போனது. இது எப்படி? இடையில் இவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? ஏன் கமிஷன் வாங்க வேண்டும்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்," என லெனின் கொதித்தார்.

"இயக்குநர் ஷங்கர் லஞ்சத்தை ஒழிக்கப் படம் எடுத்தது போல், இந்த கமிஷனை ஒழிக்கவும் ஒரு படம் எடுக்க வேண்டும். இது சினிமாவில் மிகச் சாதாரணமாகிவிட்டது. நான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து படம் எடுக்க வந்தால், இடையில் உள்ளவர்கள் யாராவது சாப்பிட நினைக்கிறார்கள். நான் சம்பாதித்த காசுக்கு எனக்குக் கணக்கு வேண்டும், இதை நான் விடமாட்டேன்," என லெனின் உறுதிபடக் கூறினார்.

மற்றொரு அனுபவத்தைப் பகிர்ந்த அவர், ஒரு குணச்சித்திர நடிகரை அணுகியபோது பெரிய சம்பளம் கேட்டதாகவும், அது அவரது விருப்பம் என்பதால் பரவாயில்லை என்றும் தெரிவித்தார். "ஆனால், பயணப்படியாக கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதையும் ஏன் நான் கொடுக்க வேண்டும்? அதேபோல், உதவியாளர்கள் சம்பளத்தில் உள்ள விதிமுறைகளும் ஒழிக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் நிபந்தனை போட்டால் யாரும் வர மாட்டார்கள். ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை," என்றார்.

"இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம். ஏதாவது எடுத்து ஒப்பேற்றிவிடலாம் என்று நினைக்கவில்லை. அதனால்தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்," என லெனின் குறிப்பிட்டார்.

படத்தின் நாயகி அஸ்மின் பேசுகையில், "இந்த 'ரெட் லேபில்' பட அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தின் மூலம் புதிய உறவுகள் கிடைத்தன. நான் வேறு ஒரு துறையிலிருந்து வந்தாலும், தயாரிப்பாளர் லெனினும், இயக்குநர் வினோத்தும்தான் நான் இந்தப் படத்தில் வரக் காரணம்," எனப் பகிர்ந்துகொண்டார்.

"இயக்குநர் என்னை படத்தில் நன்றாக வடிவமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் கைலாஷ் மேனன் இந்தப் படத்திற்குள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் அறிமுகமானது பெரிய விஷயம். ஒரு குடும்பம் போல் என்னைக் கவனித்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி," என்று அஸ்மின் தனது நன்றியைத் தெரிவித்தார்.

படத்தின் கதாசிரியர் பொன். பார்த்திபன் பேசும்போது, "இந்தப் படக்கதையைத் திரைப்படமாக மாற்றியபோது, முதலில் எவையெல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்து அவற்றைத் தவிர்த்தோம். ஆனால், கதைக்கான ஆதாரமான ஒரு வரியை, அதன் தன்மை மாறாமல், அக்னி குஞ்சு போலப் பாதுகாக்க உறுதி செய்தோம்," என்றார்.

"2023-ல் கதை விவாதமாகத் தொடங்கி, 2026 வரை ஒவ்வொரு நாளும் மெருகேறி வருகிறது இந்தப் படம். முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடும். ஒவ்வொரு காட்சிக்கும் சங்கிலி போலத் தொடர்பு இருக்குமாறு இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது," என பொன். பார்த்திபன் திரைக்கதை அமைப்பு பற்றி விளக்கினார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னோடு உரிமையாகப் பழகுபவர். எனக்கு ஒருமுறை பணத் தேவை இருந்தபோது தயங்கிக் கொண்டு நான் அவரிடம் கேட்கவில்லை. அடுத்த வாரம் தாமதமாகத்தான் கிடைத்தது. அப்போது தயாரிப்பாளர் மகிழ்ச்சியா என்று கேட்டார். 'ஒரு வாரத்துக்கு முன்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்றேன். 'ஏன் கேட்டிருக்க வேண்டியதுதானே? ஏன் தயக்கம் உங்களுக்கு?' என்றார். அந்த அளவுக்கு உரிமையோடு பழகுபவர் லெனின். இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன," என்றார்.

படத்தின் கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசும்போது, "படங்களில் சின்ன படம் பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லா படமும் ஒன்றுதான். எது ஓடுகிறதோ, அதுதான் பெரிய படம். எது ஓடும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனக்கு இந்தப் படத்தில் ஒரு நல்ல சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் பணத்துக்காக நான் இங்கு வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன். பணம் வளர வளரக் கிடைக்கும்," எனத் தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.

இசையமைப்பாளர் கைலாஷ் மேனன் பேசுகையில், "இதுதான் எனக்குத் தமிழில் முதல் படம். இங்கே முதலில் வந்தபோது எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளரும், இயக்குநரும் நன்றாக என்னைப் பார்த்துக் கொண்டார்கள். அதனால் இந்தப் பயணம் சௌகரியமாக இருந்தது," என்றார்.

"ஒரு வகையில் மலையாளப் படங்களை விட எனக்கு இங்கே மிகவும் சௌகரியமாகவும், சுலபமாகவும் இருந்தது. இங்கே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பளிக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த இயக்குநரும், தயாரிப்பாளரும் சினிமாவை நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தப் படம் இப்போது வெளியாக இருப்பது மகிழ்ச்சி," என கைலாஷ் மேனன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் கே.ஆர். வினோத் பேசும்போது, "நாங்கள் வளர்ந்து வரும் திரைப்படக் குழுவினர். வளர்ந்து வரும் நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் யாரையும் நிச்சயமாக ஏமாற்றாது என்று நம்புகிறேன்," என நம்பிக்கை தெரிவித்தார்.

படத்தில் நடித்துள்ள இயக்குநர் அனுமோகன் பேசும்போது, "அப்போதெல்லாம் சினிமாவில் ஒரு வழிமுறையைப் பின்பற்றினார்கள். முதலில் கதாசிரியரைக் கொண்டு கதையைத் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு திரைக்கதை ஆசிரியர், வசனம் என்று ஆட்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களும் தயாரிப்பாளரும் இணைந்து இயக்குவது யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். பிறகு அவர்கள் இணைந்து அந்தக் கதைக்குரிய கதாநாயகன், நடிகர்கள் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். அந்த வழியில்தான் இப்போது இந்தப் படம் உருவாகி இருக்கிறது," என்றார்.

"இப்போதெல்லாம் கதாநாயக நடிகர்கள்தான் கதையையும், படத்தின் காட்சிகளையும் முடிவு செய்கிறார்கள். 'ஷாட்' என்ன என்பதையும் அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அப்படி எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து சுயநலமாக இருக்கிறார்கள். உங்கள் சுயநலத்தை விட்டு விடுங்கள்," என அவர் கடுமையாக விமர்சித்தார்.

"இந்தப் படத்தில் ரத்தினபுரி என்று பாடலில் வரி வருகிறது. அதுதான் எங்கள் சொந்த ஊர். அந்த ரத்தினபுரியில்தான் பல சினிமாக்காரர்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேதான் சத்யராஜ், சுந்தர் சி, தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி, கே. கோபிநாத் எல்லாரும் சுற்றி இருக்கிறார்கள்," என அனுமோகன் தனது ஊரின் பெருமைகளைப் பகிர்ந்துகொண்டார்.

"சினிமா டிக்கெட்டுக்கு 120 ரூபாய் கொடுத்தால் அந்த பணத்தில்தான் 120 குடும்பங்கள் பிழைக்கின்றன. இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு எனது பெயரே மாறிவிடும்," என இயக்குநர் அனுமோகன் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

படத்தை விநியோகம் செய்து வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் குகன் பேசும்போது, "ஒரு படத்திற்கு ரசிகர்கள் எப்படி வருகிறார்கள் என்றால், முதலில் ரசிகர்கள் அதிகம் உள்ள கதாநாயகர்களுக்கு வரும் கூட்டம் பெரியது, அதைத் தவிர்க்க முடியாது. அது அல்லாத படங்களும் வரத்தான் செய்கின்றன. அப்படி 'சிறை', 'மெட்ராஸ் மேட்னி' போன்ற படங்கள் ஓடின," எனக் குறிப்பிட்டார்.

"இப்போது வரும் பார்வையாளர்கள் யார் என்றால், 15 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்து எது அவர்களைத் தூண்டுகிறதோ அந்தக் கதைகள் ஓடுகின்றன. பிறகுதான் வாய்மொழியாகப் பேசப்பட்டு மற்றவர்கள் உள்ளே நுழைகிறார்கள்," என அவர் தற்போதைய பார்வையாளர்களின் ரசனையை விளக்கினார்.

"முதல் 10 கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதையும் தாண்டி கதை உள்ள படங்கள் ஓடத்தான் செய்கின்றன. எனவே, கதை என்பதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அடுத்து பாடல்கள் முக்கியம். ரீ-ரிலீஸ் படங்கள் எல்லாம் பாடல்களால்தான் பேசப்படுகின்றன. எனவே, பாடல்களுக்கு ஓர் இடம் உள்ளது," என்றார் குகன்.

"இன்று 8 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் 10% பேர் என்றால் 80 லட்சம் பேர் படம் பார்க்க வர வேண்டும். ஆனால், இது போன்ற புதுப் படங்களுக்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் பேர்கள்தான் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது ஒரு சதவீதம் தான். அப்படி இருக்கும்போது நல்ல கதை உள்ள படங்கள் வெற்றி பெறுகின்றன," என அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

சினிமாவின் எதிர்காலம் குறித்துப் பேசிய குகன், "சினிமா டிக்கெட் மட்டுமல்ல, பிற செலவையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. வெளியில் 30 ரூபாய் விற்கும் காபி உள்ளே 150 ரூபாய் விற்கிறார்கள். 20 ரூபாய் பப்ஸ் உள்ளே 120 ரூபாய். பாப்கார்ன் 700 ரூபாய் வரை விற்கிறார்கள். படம் பார்க்க வருபவர்களுக்கு இது ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது," என திரையரங்குகளில் உள்ள உணவுப் பொருட்களின் விலையுயர்வு குறித்து வேதனை தெரிவித்தார்.

"எனவே, நாம் கொடுக்கிற காசுக்கு சரியாகப் படம் உள்ளதா என்று பார்க்கிறார்கள். ஆகையால் படத்திற்கு கதை மிகவும் முக்கியம். இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்," என்று கூறி குகன் தனது பேச்சை நிறைவு செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X