Vijay: தளபதி விஜய் இதுல ஸ்பெஷலிஸ்ட்னு தெரியாம இருந்தா.. பிரச்னை எதிர்ல இருக்கறவங்களுத்தான் போல.. விவரம் இதோ
சென்னை: நடிகர் விஜய் தனது சினிமா கெரியரின் கடைசி மாதத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம். வரும் வெள்ளிக்கிழமை அவரது கடைசி படமான ஜன நாயகன் படம் வெளியாகவுள்ளது. இதற்கான வேலைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அறிவித்த போது படத்தின் கதை என்ன என்பதில் ரசிகர்களுக்கு ஆர்வம் இருந்தது. படப்பிடிப்பு காலத்தில் இது பகவந்த் கேசரி படத்தின் ரீ மேக் என்று தகவல்கள் பரவியது. படத்தின் டிரைலர் வெளியாகி, ஜன நாயகன் பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தான் என்பது தெரிந்துவிட்டது.
ரீமேக் என்பது மிகவும் சவாலான காரியம். அதுவும் ஒரிஜினலாக உருவான படத்தின் கதையாக இருக்க வேண்டும், ஆனால் அப்படியே காப்பி அடித்தது போல இருக்க கூடாது என்பதுதான் மிகப்பெரிய சவால். அப்படி இருக்கும்போது, தளபதி விஜய் தனது சினிமா கெரியரில் அவருக்கு ரீமேக் படங்கள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அப்படி அவரது நடிப்பில் உருவான ரீமேக் படங்கள் மற்றும் அவை ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றது என்பது குறித்து பார்க்கலாம்.

விஜய் நடிப்பில் முதன் முதலில் உருவான ரீமேக் படத்தை இயக்கியவர், நடிகர் ஃபகத் ஃபாசிலின் தந்தை ஃபாசில் தான். அவரது இயக்கத்தில் மலையாளத்தில் உருவான படமான அனியத்திப்ராவு படத்தை காதலுக்கு மரியாதை என்ற பெயரில் எடுத்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய் ரசிகர்களுக்கு விருப்பமான படங்களில் இந்த படத்திற்கு தனி இடம் உண்டு. அதேபோல் தெலுங்கு படமான பெல்லி சந்ததி படத்தை நினைத்தேன் வந்தாய் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். இதுவும் விஜய்க்கு பெரிய ஹிட்டைக் கொடுத்தது.
விஜயின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமான ப்ரியமானவளே படமும் கூட பவித்ர பந்தம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான். மேலும், நண்பர்களுக்காக விஜய் நடித்த படமான பிரண்ட்ஸ் படம் மலையாள படத்தின் ரீமேக் இந்த படத்தின் கிளைமாக்ஸில் ரசிகர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் படத்தின் காமெடி காட்சிகள் சிறப்பாக ஒர்க் ஆகி தியேட்டரிக்கல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

விஜய் ரீமேக் செய்த படங்களில் பெரும்பாலான படங்கள் தெலுங்கு படங்கள் தான். அதுவும், ஃபேமிலி ஹிட்டாக மாறிய பத்ரி, யூத், வசீகரா உள்ளிட்ட படங்களும் விஜய்க்கு அதிகப்படியான பெண் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. மேலும் விஜயின் மிகப்பெரிய ஆக்ஷன் வெற்றியை பெற்றுக் கொடுத்த, போக்கிரி, கில்லி, ஆதி உள்ளிட்ட படங்களும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது தான். இதில் கொஞ்சம் சொதப்பிய படம் என்றால் அது வில்லு. ஆனாலும் படம் பாக்ஸ் ஆபீஸில் படத்திற்கு வெற்றியைக் கொடுத்தது.

மேலும், காவலன், நண்பன் ஆகிய படங்களில் காவலன் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. அதேபோல், நண்பன் படம் இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக். நண்பன் படம் தான் விஜய் நடிப்பில் கடைசியாக உருவான ரீ மேக் படம். அப்படி இருக்கையில் அதன் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ படமானது, A History of Violence என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல். அதன் பின்னர் தளபதி நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள ஜன நாயகன் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீ மேக் என்பது உறுதியாகி விட்டதால், தளபதி விஜய்க்கும் ரீ மேக் படங்களுக்கும் எப்போதும் தனி பொருத்தமே உள்ளது. அந்த வகையில் பாக்ஸ் ஆபீஸில் ஜன நாயகன் பட்டையைக் கிளப் போவது உறுதி, இது போக்கிரி பொங்கலை விடவும் பல மடங்கு பெரிய பொங்கலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள். அப்படியே அமைய வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











