Vijayakanth: விஜய், சூர்யாவை வளர்த்து விட்ட விஜயகாந்த்.. இறுதி அஞ்சலி செலுத்துவார்களா?
சென்னை: நடிகர் விஜயகாந்த் இன்று காலை சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் உயிரிழந்த அதிர்ச்சி அறிவிப்பை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள், பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தனது படங்களில் இளம் நடிகர்களை நடிக்க வைத்து அவர்களை முன்னணி ஹீரோக்களாக மாற்றும் வித்தையை அந்த காலத்தில் அதிகளவில் சிவாஜி செய்து வந்த நிலையில், அதன் பிறகு அதை விட சிறப்பாக அந்த விஷயத்தை எந்தவொரு சுயநலமுமின்றி விஜயகாந்த் செய்து வந்தார்.

கேப்டன் என ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தை சேர்ந்த பலரும் கொண்டாடி வரக் காரணமே அவர் உண்மையாகவே சினிமா கடலில் தத்தளித்த பல நடிகர்களை கரை சேர்த்ததால் தான்.
விஜய் அப்பா இயக்கத்தில்: நடிகர் விஜயகாந்த் ஆரம்பத்தில் இருந்தே இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சிலே துணிவிருந்தால், நீதி பிழைத்தது, பட்டணத்து ராஜாக்கள், ஓம் சக்தி, சாட்சி, வெற்றி, வீட்டுக்கு ஒரு கண்ணகி, குடும்பம், புது யுகம் என பல படங்களை தொடர்ந்து விஜயகாந்தை வைத்தே இயக்கினார்.
செந்தூரப்பாண்டியில் விஜய்: 1993ம் ஆண்டு விஜயகாந்தை வைத்து ராஜதுரை படத்தை இயக்கிய எஸ்.ஏ. சந்திரசேகர் அதே ஆண்டு விஜயகாந்தை வைத்து இயக்கிய செந்தூரப் பாண்டி படத்தில் தனது மகன் விஜய்யையும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். விஜய்யின் அறிமுக படமான நாளைய தீர்ப்பு படம் சொதப்பிய நிலையில், சம்பளமே வாங்காமல் விஜய்க்காக செந்தூரப்பாண்டியில் டைட்டில் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுத்தார். அந்த படம் விஜய்க்கு பெரியளவில் கை கொடுத்தது.
சூர்யாவுக்கு பெரியண்ணா: அதன் பின்னர் அப்பா இயக்கத்தில் பல படங்களில் விஜய் நடித்து வந்தார். நடிகர் விஜய்யை போலவே சூர்யாவுக்கும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என நினைத்த விஜயகாந்த் தனது பெரியண்ணா படத்தில் அவரை நடிக்க வைத்திருந்தார். அந்த படத்தையும் எஸ்.ஏ. சந்திரசேகர் தான் இயக்கி இருந்தார். லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்டன்டட் கேமியோவாக நடித்திருப்பதை போல பெரியண்ணா படத்தில் விஜயகாந்த் கேமியோ ரோல் செய்திருப்பார். "நான் தம்மடிக்கிற ஸ்டைல்" உள்ளிட்ட சில பாடலை சூர்யாவுக்காக நடிகர் விஜய் பாடியிருப்பார் என்பதும் கூடுதல் தகவல்.
விஜய், சூர்யா மட்டுமின்றி சினிமாவில் பல நடிகர்களுக்கு முழு சப்போர்ட்டாக விஜயகாந்த் இருந்து வந்துள்ளார். வடிவேலுவுக்கு எல்லாம் பல உதவிகளை அவர் செய்திருக்கிறார். எங்கள் அண்ணா படத்தில் பிரபுதேவாவை செகண்ட் ஹீரோவாக நடிக்க வைத்திருப்பார். எப்போதுமே கேப்டன் விஜயகாந்தை தமிழ் சினிமாவும் முன்னணி நடிகர்களும் மறக்கவே மாட்டார்கள். நடிகர் சங்கத் தலைவராக அவர் இருந்த காலத்தில் ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளும், நடிகர்கள் மத்தியில் எந்த பிரச்சனை வந்தாலும் உடனடியாக தலையிட்டு அதை தீர்த்து வைத்து வந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











